Ad Widget

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவுவோம் -மாலைதீவு

நமது இரண்டு நாடுகளும் மிகச் சிறந்த அயலவர்களாவோம். நாடுகளின் மீது மேற்கொள்ளப்படுகின்ற முறையற்ற புற தலையீடுகளை நாம் அங்கீகரிக்க மாட்டோம். ஆகவே சர்வதேச அரங்குகளில் மாலைதீவு இலங்கைக்காக தொடர்ச்சியாக தோற்றியுள்ளது.

President Mahinda Rajapaksa and Maldivian President Abdulla Yameen

எதிர்காலத்திலும் இலங்கையோடு தோளோடு தோள் நின்று ஒத்துழைப்புடன் செயலாற்ற நாம் தயாராக இருக்கின்றோம். மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயும் (Abdulla
Yameen Abdul Gayoom) அவர்கள் நேற்று மாலை மாலைதீவு நகரில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இலங்கை தூதுக் குழுவினருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் உரையாடியதன் பின்னர் இரு தரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவையும் பரஸ்பர பெறுபேறுமிக்க தொடர்புகளையும் மீளாய்வு செய்த இப்பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வளர்த்துக்கொள்ளவும் பலப்படுத்திக்கொள்ளவும் கூடிய வழிமுறைகள்பற்றி ஆராயப்பட்டது. எமது வலயம் பொறுக்க முடியாதளவு துன்ப துயரங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. ஒன்றாக சேர்ந்து எழுச்சியடைவதன் மூலம் அதை நிறுத்த முடியும் என மாலைதீவு தலைவர் கூறினார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் நான்கு முறை மாலைதீவுக்கு விஜயம் செய்திருப்பதை நினைவுகூர்ந்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையை ஆரம்பித்த அப்துல்லா யமின் ஜனாதிபதி அவர்கள் இலங்கை தமது நாட்டுக்குச் செய்துள்ள உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

தனக்கும் தனது தூதுக் குழுவுக்கும் கிடைத்த மகத்தான வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டார்.

நீங்கள் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவை
மேலும் பலப்படுத்திக்கொள்ள உதவியாக அமைந்தது. நீங்கள் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் மாலைதீவு புதிய சக்தியுடன் முன்னேறுவதை நாம் காண்கின்றோம்.

சார்க் அமைப்பிலே மாலைதீவு வகிக்கும் பாத்திரம் பாராட்டத்தக்கது. எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு மாலைதீவு அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பும் நட்புறவும் பிராந்திய நாடுகளுக்கு மாத்திரமல்ல ஆசியாவிலும் உலகத்திலும் சமாதானத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது எனச்சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் நாம் பொது அரங்கில் இருந்து ஒரே குரலில் பேச வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இருதரப்பு தொடர்புகளை திட்டமிட்ட வகையில் வளர்த்துக்கொள்ளும் பொருட்டு இலங்கை – மாலைதீவு
ஒருங்கிணைந்த ஆணைக்குழுவை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அப்துல்லா யமின், ஆணைக்குழு அடுத்த ஆகஸ்ட் மாதம் கூடும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாலேயிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலைதீவின்
முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கையூம் அவர்களைச் சந்தித்தார்.

நட்புரீதியான இச்சந்திப்பின் போது பல்தரப்பு நலன்கள் குறித்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரண்டு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டுக்கு வழங்கும் ஒத்துழைப்புகள் குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்ட அதேநேரம் தொடர்ச்சியான இருதரப்பு உறவுகள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளனர்.

இலங்கை எமது மிகவும் நெருங்கிய நட்புநாடு என முன்னாள் ஜனாதிபதி கையூம் தெரிவித்தார். நீண்டகாலமாக நாங்கள் சிறந்த அண்டை நாடுகளாக இருந்துவருகிறோம் என்றும் இந்த உறவுகள் தொடரவேண்டுமென தான் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெரிய சக்திகளின் தேவையற்ற அழுத்தங்கள் தொடர்வதாகக் குறிப்பிட்ட இரண்டு தலைவர்களும் இவ்விடயத்தில் பணம் ஒரு பாரிய பங்கை வகிப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உயர் கலவி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுக்கா செனவிரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts