Ad Widget

இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை!! – இராணுவம்

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை என்று தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் பாலகிருஷ்ணன் நிரோஸ் குமார் என்பவரின் தகவலறியும் உரிமை விண்ணப்பம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மேற்படி ஆணைக்குழு கூடியபோது, அதன் முன்பாக காணொளி காட்சி மூலம் தோன்றி சாட்சியமளித்த இலங்கை இராணுவ பிரிகேடியர் என்.கே. நாகாவத்த இந்த தகவலை பதிவு செய்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கோரி, ஊடகவியலாளர் நிரோஸ் குமார் – தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.“

அதற்கு திருப்திகரமான பதில் வரவில்லை என்று கூறி அவர் – இது விடயமாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கிணங்க கடந்த 3ஆம் திகதி விசாரணைக்காக ஆணைக்குழு கூடியபோது காணொளி வழியாக முன்னிலையான பிரிகேடியர் நாகாவத்த, ”யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் எவரும் சரணடையவில்லை” என தெரிவித்தார்.

இதன்போது ஊடவியலாளர் நிரோஸ் சார்பாக சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் மற்றும் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தன ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி- வாதங்களை முன்வைத்தனர்.

ஊடகவியலாளர் நிரோஸ் குமார், இலங்கை இராணுவத்திடம் சில விவரங்களைக் கோரி, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி, இலங்கை இராணுவத்தின் தகவல் அறியும் அதிகாரிக்கு விண்ணப்பமொன்றை அனுப்பி வைத்தார்.

‘இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்கள்’ எனத் தலைப்பிடப்பட்டிருந்த அந்த விண்ணப்பத்தில் 6 கேள்விகளுக்கான தகவல்களை நிரோஸ் கோரியிருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த எத்தனை பேர் இராணவத்தினரிடம் சரணடைந்தனர்? (ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எத்தனை பேர்)

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எந்தெந்தப் பகுதியில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அது தொடர்பான தகவல்கள் வழங்கப்படல் வேண்டும்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடையும் போது, அவர்களைப் பொறுப்பேற்ற இராணுவ அதிகாரிகள், இராணுவப் படைப்பிரிவு போன்றவற்றின் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? அவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யயப்பட்டிருந்தால் அது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதிகள் அல்லது உயர் பதவிகளில் இருந்தோர் எத்தனைபேர் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் சரணடைந்த இராணுவத் தளபதி, இராணுவப் படைப் பிரிவு போன்ற தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

புலிகள் அமைப்பின் சரணடைந்த முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? சரணடைந்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அல்லது அவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தால் அவை தொடர்பான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்று நிரோஸ் குமார் தனது விண்ணப்பத்தில் கேட்டிருந்தார்.

2019 ஜூன் 25ஆம் திகதி இதற்கு – எழுத்து மூலம் பதிலளித்த இலங்கை இராணுவத்தின் தகவல் அதிகாரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை என்றும், அவர்கள் இலங்கை அரசிடமே சரணடைந்தார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பான விவரங்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்திடம் பெற்றுக் கொளள்ள முடியுமெனவும், அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் திருப்தியடையாத ஊடகவியலாளர் நிரோஸ் குமார், தனது விண்ணப்பம் தொடர்பில் – இலங்கை இராணுவத்துக்கு மேன்முறையீடு செய்தார். அப்போதும், முன்னைய பதில்தான் ராணுவத்திடமிருந்து கிடைத்தது.

இந்த நடவடிக்கைகளின் போது, தனது விண்ணப்பத்தினை தமிழில் சமர்ப்பித்திருந்ததாகவும் ஆனால், தனக்கு வழங்கப்பட்ட எழுத்து மூல பதில்கள் அனைத்தும், சிங்கள மொழியிலேயே கிடைத்ததாகவும் நிரோஸ் குமார் கூறுகின்றார்.

இராணுவப் பகுதிக்கு வந்தோரில் புலிகள் இருந்தார்களா எனத் தெரியாது இராணுவம் வழங்கிய பதில்களில் திருப்தியடைதாக நிரோஸ் குமார், 2019ஆம் ஆண்டு 10ஆம் மாதம் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு நேரடியாகச் சென்று, தனது விண்ணப்பம் தொடர்பில் முறையீடு செய்ததாக ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் 3 வருடங்கள் கடந்த நிலையில் இம்மாதம் 3ஆம் தேதி, நிரோஸ் வழங்கிய முறைப்பாட்டை, தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது காணொளி மூலம் தோன்றி சாட்சியமளித்த இராணுவ பிரிகேடியர் என்.கே. நாகாவத்த” யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை.

அப்போது மக்கள் இடம்பெயர்ந்து இராணுவப் பகுதிக்கு வந்தார்கள். அவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருந்தார்களா என எமக்குத் தெரியாது. எம்மிடம் வந்தவர்கள் தொடர்பில் நாங்கள் எந்தப் பதிவுகளையும் செய்யவில்லை.

அவர்களை பேருந்துகளில் ஏற்றி – உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்படும் முகாம்களுக்கு அனுப்பி வைத்தோம். அந்த முகாம்கள் புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. அங்கு சென்றவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை அந்தப் பணியகம்தான் மேற்கொண்டது. அவ்வாறான தகவல்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்திடம்தான் பெற்றுக் கொள்ள முடியும்” என்று கூறியதாக ஊடகவியலாளர் நிரோஸ் குமார் தெரிவித்தார்.

நான்கு பேரைக் கொண்ட தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் முன்னிலையில், இந்த விடயங்களை இலங்கை இராணுவத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி கூறியிருந்தார்.

இதன்போது இராணுவத்தின் கூற்றை மறுத்த ஊடகவியலாளர் நிரோஸ் குமார் தரப்பு சட்டத்தரணி ஸ்வஸ்திகா, இராணுவத்தினரிடம் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சரணடைந்தமை தொடர்பான சில ஆவணங்களை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார்.

இராணுவத்திடம் புலிகள் சரணடைந்ததாக அப்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள், அப்போதைய இராணுவப் பேச்சாளர் உள்ளிட்டோர் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்த செய்திகள் இந்த ஆவணங்களில் உள்ளடங்கியிருந்தன.

இரு தரப்பினரின் வாதங்களையும் கவனத்திற் கொண்ட ஆணைக்குழு, ஊடகவியலாளர் நிரோஸ் மற்றும் இராணுவம் ஆகிய தரப்பினர் தத்தமது நிலைப்பாடுகள் தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி விசாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் தம்மிடம் விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளமை தொடர்பில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி எழிலனின் மனைவியும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில்,

2009ஆம் ஆண்டு இறுதி யுததம் முடிவுக்கு வந்தபோது, இராணுவத்திடம் எழிலன் சரணடைந்ததாகவும் அதனை தான் நேரில் கண்டதாகவும் அனந்தி சசிதரன் நீண்ட காலமாக கூறி வருகின்றார்.

இவ்விடயம் தொடர்பாக பேசிய அனந்தி, “இராணுவத்திடம் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் சரணடையவில்லை எனக் கூறப்படுவது பொய்” என்கிறார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி – அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசஃப் உடன் சென்ற எழிலன், இராணுவத்திடம் சரணடைந்ததை தான் நேரில் கண்டதாகத் கூறியுள்ளார்.

”முள்ளிவாய்க்காலில் இருந்து இராணுவம் அழைத்த இடத்துக்கு மக்களுடன் சேர்ந்து நானும் எனது மூன்று பிள்ளைகளும் வரிசையில் சென்றோம். அப்போது அரச உத்தியோகத்தருக்கான எனது அடையாள அட்டையை இராணுவத்தினரிடம் காட்டினேன்.

இராணுவ அதிகாரியொருவர் வந்து எனது அடையாள அட்டையைப் பார்த்து விட்டு, நீ இந்த வரிசையில் வரவேண்டாம், உனக்கான வரிசை அங்கேயுள்ளது என கொச்சைத் தமிழில் கூறி, நான் நின்ற வரிசையிலிருந்து என்னையும் பிள்ளைகளையும் நீக்கி விட்டார்”.

”அப்போது பிரான்சிஸ் ஜோசஃப் உடன் சென்று – இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் சற்று தூரத்தில் நின்றிருந்த எழிலன், என்னைப் பார்த்து, ‘நீ போ’ என்பது போல் தலையசைத்தார்.

முட்கம்பிகளுக்கு இந்தப் பக்கம் நாங்களும் அந்தப் பக்கம் அவர்களுமான இருந்தோம். அப்போது அங்கு நின்ற பேருந்துகளை நோக்கி எழிலன் உள்ளிட்டவர்களை ராணுவத்தினர் அழைத்துக் கொண்டு செல்வதை நான் பார்த்தேன்” என, அனந்தி கூறியுள்ளார்.

எழிலனை அழைத்துச் சென்றவர்கள் இராணுவ சிப்பாய்கள் இல்லை என்றும், இராணுவ உயர் அதிகாரிகளே அழைத்துச் சென்றனர் எனவும் அனந்தி தெரிவித்துள்ளார்.

“எழிலனுக்கு அருகாமையில் நாங்கள் நின்றிருந்த ஒரு சமயத்தில் ‘மாவிலாறு’ ‘எழிலன்’ எனும் வார்த்தைகளைக் கூறிக் கொண்டே எழிலனை இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்” எனவும் அனந்தி குறிப்பிட்டுள்ளார்.

“அந்த இடத்திலிருந்து பொதுமக்களை பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு சென்றன. அதில் நானும் பிள்ளைகளும் சென்றோம். ஓமந்தையில் ஓரிடத்தில் பேருந்து தரித்து நின்றது. அப்போது மற்றைய பேருந்தில் வந்த ஒருவர் என்னிடம் ஓடிவந்து, ‘அனந்தி அக்கா, நல்லவேளை நீங்கள் வந்து விட்டீர்கள். அங்கு ஆர்மி உங்களைத் தேடுகிறார்கள்’ என்றார்.

விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களோடு அவர்களின் குடும்பத்தினரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றிருந்தனர் என்பது, அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது” எனவும் அனந்தி கூறினார்.

தனது கணவர் எழிலன் இராணுவத்தினரிடம் சரணடைந்தமையை தான் நேரில் கண்டதை, நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியங்களின் போதும், தான் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரிடம் சரணடைவதற்காக எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை அழைத்துச் சென்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசஃப் கூட அதற்குப் பிறகு திரும்பவில்லை என்றும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

”தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமொன்றுக்கு அண்மையில் இராணுவம் பதிலளிக்கும் போது, தம்மிடம் யாரும் சரணடையவில்லை என்று கூறியிருந்தது.

ஆனால், தாய்மாரும் மனைவியர்களும் இராணுவத்திடம் தங்கள் உறவுகளை தாங்களே கையளித்ததாக புகார் கூறுகின்றனர்.

இப்படியிருக்கும் போது, தங்கள் கண்கள் முன்பாகவே இராணுவத்திடம் பலர் சரணடைந்தமையை மக்கள் பார்த்துள்ள நிலையில், இராணுவத்திடமிருந்து இப்படியொரு அறிக்கை வெளிவருவதால், மக்கள் உடனடியாவே நம்பிக்கை இழந்து விடுகின்றனர்” என சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பாலகுமாரனை தாம் கைது செய்யவில்லையென படைத்தரப்பும், இராணுவமும் திரும்பத்திரும்ப கூறிவந்த நிலையில் அவர்களது புகைப்படம் ஒன்றும் வெளியாகியிருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் க.வே.பாலகுமாரனும், அவரது மகனும் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவது போன்று அப்புகைப்படம் காணப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன், முல்லைத்தீவு நீதிமன்றில் இராணுவம் தெரிவித்தது போன்று அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் சரணடைந்தவர்களின் பெயர் விபரம் வெளியிடப்பட வேண்டும். அதனுடாக ஆணைக்குழு தனது கணவனை கண்டுபிடித்து தரவேண்டும் என போராளி பரராஜசிங்கம் உமாபதியின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் தனது சாட்சியத்தில், 11 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்த இந்த அரசால் வெளிப்படையாக பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட 50 பேரின் விபரங்களை வெளியிட முடியாமைக்கான காரணம் என்ன? எனஆணைக்குழுவிடம் கேள்வியெழுப்பினார்.

அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் தனது கணவர் பரராஜசிங்கம் உமாபதி உட்பட 50 போராளிகள் 2009 ஆம்ஆண்டு மே மாதம் 17-ம் திகதி இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் அவர் எம்முடன் இன்று வரை எந்தவித தொடர்புகளும் அற்று இருக்கின்றார் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிட்டதாவது,

“எனது கணவர் உட்பட 50 போராளிகளையும் அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் பையும் ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான சிவப்பு நிற பேருந்தில் சென்றவர்களின் விபரம் எமக்கு கிடைக்கப் பெறவில்லை எனவே இது தொடர்பாக எங்களுக்கு நீதி வேண்டும்.

போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்த இந்த அரசால் வெளிப்படையாக பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட இந்த 50 பேர் தொடர்பாக விபரங்களை வெளியிட முடியாமைக்கான காரணம் என்ன? எனது கணவனை தேடி வருடங்களாக நான் அலைந்து திரிகின்றேன்.

இறுதி யுத்தத்தின் போது அரசாங்கம் விடுதலைப் புலிகளை சரணடைய கூறியது. அதனடிப்படையில் எனது கணவர் 33 வயதில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

அவர் இருக்கின்றாரா? இல்லையா? என ஆணைக்குழு தெரிவிக்க வேண்டும். அருட்தந்தை பிரான்சிஸ் யோசப்புடன் சரணடைந்த போராளிகளில் ஆறு பேருக்கான ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடந்து வருகிறது.

அதன்படி கடைசியாக நடை பெற்ற வழக்கின் போது வட்டுவாகல் பகுதியில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளது என சாட்சியமளித்து அதனை இராணுவம் ஒப்புக்கொண்டது.

அந்த பட்டியலின் அடிப்படையில் இம்மாதம் நடைபெறவுள்ள வழக்கில் குறித்த பட்டியலில் எனது கணவரின் பெயர் வரும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

இராணுவம கூறுகிறது, சசிதரன் என்றழைக்கப்படும் எழிலன் பெயர் தங்களிடம் இல்லை. ஆனால் வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரம் எங்களிடம் இருக்கின்றது என்று ஆறு பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுவில் முதலாவது நபர் எழிலன்.

ஆனால் ஆட்கொணர்வு மனுவின்படி எழிலன் தொடர்பாக விசாரணையில் எழிலன் இல்லை என இராணுவம் கூறுகிறது. ஆனால் ஏனைய சரணடைந்தவர்களின் பட்டியல் இருப்பதாக கூறுகிறது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இந்த பட்டியலை இராணுவம் சமர்ப்பிக்கவேண்டும். அந்த பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டால் எனது கணவரின் பெயரும் அதில் உள்ளடக்கப்பட் டிருக்கும்.

ஏன் என்றால் எனது கணவரும் அந்த இராணுவ முகாமில் தான் சரணடைந்தார். எனவே ஆணைக்குழு எனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும்” என ஆணைக்குழு முன் கண்ணீர்மல்க சாட்சியமளித்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts