Ad Widget

இறுதி யுத்தத்தில் கிளஸ்டர் குண்டுகள்; த கார்டியன் தகவல்

இறுதிக்கட்ட போரில் ஸ்ரீலங்கா படையினர் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் (cluster bombs) (AO-2.5RT, RBK-500 AO-2.5RT) வன்னி பிரதேசத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்களாக அமைந்துள்ளதாக த கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cluster bombs-3

வன்னி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் த ஹலோ ட்ரஸ்ட் (the halo trust) என்ற அரசசார்பற்ற நிறுவனத்தை மேற்கோள்காட்டி த கார்டியன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பிலான புகைப்படங்களை வெளியிட்டுள்ள த கார்டியன் ஆயுதப்படைகள் இறுதி யுத்தத்தின்போது சர்வதேச யுத்த விதிகளுக்கு மாறாக கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் இவையெனனவும் தெரிவித்துள்ளது.

cluster bombs-2

சுமார் 40ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்த இறுதிக்கட்ட போரில் இவ்வாறான பாரிய தாக்கங்களை ஏற்படும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான ஆதரங்களாகவும் த இதனை த கார்டியன் கூறியுள்ளது.

சுண்டிக்குளம் பிரதேசத்தில் கிளஸ்டர் குண்டின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, சாலை பிரதேசத்தில் வெடிக்காத நிலையில் கிளஸ்டர் குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இரண்டு புகைப்படங்களையும் த கார்டியன் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் ஸ்ரீலங்காவின் ஆயுதப்படைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு எதிரான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

cluster bombs

புகைப்படங்களில் காணப்படும் குண்டுகளானது கடந்த 2008, 09 ஆண்டுகளில் அரச படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை எனவும் த கார்டியன் தெரிவித்துள்ளது.

குறித்த புகைப்படங்களை த ஹலோ ட்ரஸ்ட் (the halo trust) என்ற மிகப்பெரிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் த கார்டியன் ஊடகத்திற்கு வழங்கியுள்ளார்.

இதனூடாக இறுதி யுத்தத்தின்போது வெவ்வேறு இடங்களில் கிளஸ்டர் குண்டுகள் மற்றும் பாரிய ஆயுதங்கள் பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்களாக தான் இதனை கருதுவதாகவும் குறித்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறான கிளஸ்டர் குண்டுகளின் 42 பாகங்கள், ஆனையிறவு, பச்சிலைப்பள்ளி போன்ற இடங்களிலும் 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீட்கப்பட்டதாக த ஹலோ ட்ரஸ்ட்டின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரண்டு குண்டுகளையும் இணங்கண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆயுத ஆய்வாளர்கள் அவை ரஷ்ய நாட்டு தயாரிப்புகள் எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கிளஸ்டர் குண்டுகள் எதனையும் பாவிக்கவில்லையென ஸ்ரீலங்கா அரசாங்கம் மறுத்திருந்தது.

குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக அறிந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு ஸ்ரீலங்கா அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியிருந்தது.

அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தார். பொதுமக்களை பாதிக்கும் வகையில் பாரியதாக்கங்களை ஏற்படும் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும் கூறியிருந்தார்.

சர்வதேச யுத்த விதிகளுக்கு ஏற்பவே படையினர் செயற்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். அதேவேளை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் அவ்வாறு கூறியிருந்தது.

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமை பேரவையின் கூட்டத் தெடாரிலும் அப்போது மனித உரிமைகள் விவகார அமைச்சராக பதவி வகித்த மஹிந்த சமரசிங்கவும் இதனை மறுத்திருந்தார்.

இந்த நிலையில் சர்வதேச விதிகளுக்கு மாறாக பாரிய தாக்கங்களை எற்படுத்தும் ஆயுதங்களை ஸ்ரீலங்கா படையினர் பயன்படுத்தியுள்ளமை இந்த செய்தியின் மூலமாக தெரியவந்துள்ளது.

சுமார் 40ஆயிரம்பேர் கொல்லப்பட்டதாகவும் பல்லாயிரக்கனக்கானோர் காயமடைந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அத்துடன் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தெடரில் விளக்கமளித்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் சுமார் ஒரு இலட்சம் பேர் காணமல்போயிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts