Ad Widget

இறந்தவர்களை இறந்தநாளில் நினைவுகூராமல் அவர்களின் பிறந்த நாளிலா நினைவுகூருவது?

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இறந்தவர்களை மே 18இல் நினைவுகூராமல் அவர்கள் பிறந்தநாளிலா நினைவுகூருவது? எனக் கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

முழு உலகுமே கண்வெட்டாமல் பார்த்திருக்க, எண்ணற்ற மனித ஆன்மாக்கள் காவு கொள்ளப்பட்ட சிவப்புக்கறை படிந்த மே மாதம் என்பது தமிழ் மக்களினைப் பொறுத்தவரை உயிரோடு ஒன்றித்த துயரம்மிக்க நாளாகும்.

விதியென்ற சூறைக்காற்று சுழன்றடிக்கும்போது பூவென்றும் பிஞ்சென்றும் காயென்றும் கனியென்றும் கருதுவதில்லை. ஆனால் விதிமீறி மதிகெட்டு நிகழ்ந்த இறுதிப் போரிலே குழந்தைகள் பெரியவர் என்ற பேதங்களேதுமின்றி ஆயிரமாயிரமாய் மனிதம் வீழ்ந்தது மண்ணில் பிணமாய்.

பிறப்பிலே தோன்ற மனிதன் இறப்பிலே மறைவது தத்துவமாயினும் உறவினர்களால் நினைவுகூரப்படுவதன் மூலம் மறைந்தும் மறையாதவனாய் வாழ்கின்றான் இதை உலகத்து மறைகள் அனைத்துமே கூறியுள்ளன.

மறைந்த மானுடன் நினைவுகூரப்படுவது சக மானுடனின் மனிதப்பண்பாகும் இந்த விதியை மீறுபவன் பந்தம், பாசம் என்ற பிணைப்பிலிருந்து மீண்டவனாய் மனிதம் என்ற கட்டுக்கோப்பிலிருந்து ஒதுங்கப்பட்டவனாகவே இருக்கமுடியும்.

தானாடாவிட்டாலும் தன் ஆசை ஆடும் என்பதுபோல் இறைந்தவரைப் பிரிந்தவர் அழுவதற்குத் தடை விதிப்பினும் அவர்தம் உயிரான்மா அழுதுகொண்டேயிருக்கும் அதனைத் தடுப்பது யாராலும் முடியாததொன்றே இலங்கையிலும் முள்ளிவாய்க்கால் என்ற மண்ணிலே அப்பாவித் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் காவுகொள்ளப்பட்ட நாட்கள் என்பது அவர்களின் இறப்பு நாட்களே. இறந்த நாளை ஆண்டுதோறும் நினைவுகூரப்படுவது தமிழ் மக்களின் பாரம்பரியம் மட்டுமல்ல உலகில் மனிதன் என்ற அடையாளமுடைய அனைத்து மக்களினதும் வழமையாகும்.

இந்த வழமைக்குத்தான் இலங்கையில் சிறைப்பூட்டுயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக் குரலாகவும் உலகத் தமிழ் மக்களின் உன்னதப் பேசுபொருளாகவுமே காலாதிகாலமாக விளங்குகின்றது.

தமிழ்மக்கள் சார்பில் எந்தவொரு மாற்றம் நிகழினும் சர்வதேசம் காதுகொடுத்துக் கேட்கும் அபிப்பிராயத் தளமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே.

ஆசிரியர் சங்கமாயினும், மாணவர் ஒன்றியமாயினும் ஊழியர் சங்கமாயினும் அனைவரதும் ஒருமித்த பார்வை என்பது தமிழ் மக்களிளைப் பொறுத்தவரை கிளையாறுகள் சேர்ந்த தலையாறுகள்தான்.

அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் மரித்தோர் நினைவுத்தினத்தைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் ஏற்னவே எச்சரிக்கை விடுத்திருந்தாலும் யாழ் பல்கலைக்கழகத்தின் அத்தனை செயற்பாடுகளும் ஸ்தம்பித்துப் போகும் வினோதமான இந்த விடுமுறை எதற்காக? வளாகத்தினுள் நினைவேந்தல் நிறைவேறிவிடக் கூடாது என்ற அரசாங்கத்தினதும் நிர்வாகத்தினதும் கூட்டுத்திட்டமா?

இறந்தவர்களை இறந்தநாளில் நினைவுகூராமல் அவர்களின் பிறந்த நாளிலா நினைவுகூருவது? யாருக்காக இந்த நினைவுகூரல்? குண்டுபட்டு குருதி கொப்பளிக்கும் தாயின் முலையிலே மிண்டி உறிஞ்சினாலும் பாலில்லை என்பதை அறியாத பிஞ்சுக் கொழுந்துகளிற்கான நினைவுகூரல்.

உண்டுறங்கிய வீடிழந்து நிண்டுசிரித்த முற்றமிழந்து கண்டு கழித்த உறவிழந்து எல்லாமும் எல்லாமே இழப்பதற்கு இனியேது என்ற நிலையிலே தம்மையும் பறிகொடுத்த அப்பாவி மக்களிற்கான நினைவுகூரல்.

பிறகு எதற்காக இதில் தேவையில்லாத சாயங்களைப் பூசுகிறீர்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது எப்பொழுதுமே எம் மக்களின் குரலாகவே ஒலித்துக் கொண்டிருக்கும்.

இந்தக் குரலின் தொனிப்பிலே யாருக்குமே கெடுதல் நேராது. நாம் உலகத்தை நேசிக்கக் கற்றவர்கள். மானுடம் தழைக்கவேண்டும் என விரும்புபவர்கள். ‘ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்களே’ எனப் பேரரறிஞர் அண்ணா கூறியதைப் போல் இனவொற்றுமையை மதிப்பவர்கள்.

நாகரிகம் மிக்க கல்விப் புலம்கொண்ட எம்மீது நீங்கள் கூறுகின்ற அந்தப் பயங்கரவாதச் சேற்றினைப் பூசாதீர்கள். கல்விதான் எமது ஒரே இலக்கு. அரசியல் செயற்பாடுகளோ அரசியல் கட்சிகளே எமக்கு அப்பாற்பட்ட விடயங்கள்.

நாம் நாட்டைப் பிரித்துத் தரச்சொல்லிக் கேட்கவில்லை. நியாயமான எங்கள் மக்களின் செயற்பாடுகளைத் தடையின்றி மேற்கொள்ளவே கேட்கின்றோம். நாங்கள் யாருக்கும் எதிரானவர்களும் இல்லை. குழப்பவாதிகளும் இல்லை.

எங்களோடு கவரிமான்களாய்ப் பிறந்து கவிகளாய் கூனிக்குறுகி நிற்கும் பல்கலைக்கழக நிர்வாகமே. கற்றிந்து தெளிந்த அறிவுள்ள உம்மால் இதையெல்லாம் உரியவர்களிற்குத் தெளிவுபடுத்தும் எண்ணப்பாங்கே வராதா?

காரணமில்லாத விடுமுறையின் காரணத்தை உலகறியும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான தடை குறித்த ஆராயப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஊடகமாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் இந்த விடுமுறை என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது இதற்கு எமது ஆழ்ந்த எதிர்ப்பினை மனவருத்தத்தோடு கூறிக்கொள்கினறோம்.

யுத்தத்தில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூரவிடாமல் தடுக்கும் அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்காக தீர்வை வழங்கப்போகின்றது என்பது கடந்த ஐந்து வருடங்களாக எம்மவரிடையே எழுந்துவரும் கேள்வியாகும்.

ஆகவே தமிழ் மக்களாகிய நாங்கள் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை என்றுமே மறந்திட முடியாது. எனவே அனைவரும் மே.18 இல் இதயபூர்வமாகக் கொண்டாடுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

notes-uni

notes-uni2

Related Posts