Ad Widget

இருமாதகாலத்தின் பின்னர் டெல்டா வைரசின் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

உலகின் அநேகமான நாடுகளில் கொவிட் – 19 வைரஸின் புதிய திரிபுகள் பரவ ஆரம்பித்து 2 – 3 மாதகாலத்தின் பின்னரே அதன் மோசமான தாக்கங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. எனவே தற்போது எமது நாட்டிலும் டெல்டா வைரஸ் திரிபுகள் இனங்காணப்பட்டுவரும் நிலையில், இருமாதகாலத்தின் பின்னர் இதன் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி நாடு மிகமோசமான தொற்றுப்பரவல் நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதென்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும். அத்தோடு அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கென ஒரு சீரான வழிமுறை உள்ளது. அதனைப் பின்பற்றாமல், உடனடியாகக் கொடுப்பனவு அதிகரிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்த அரச சேவையிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பி.சிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்திருக்கிறது. எதிர்வரும் காலங்களில் இது பாதகமான பல தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று வைத்தியநிபுணர்கள் எதிர்வுகூறியிருக்கும் நிலையில், இதுகுறித்து வினவியபோதே வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

நாட்டின் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையே தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்குக் காரணமாகும். அதுமாத்திரமன்றி அண்மைக்காலத்தில் கொவிட் – 19 வைரஸின் திரிபான டெல்டா தொற்றுக்குள்ளான நபர்கள் திருகோணமலை உள்ளடங்கலாக நாட்டின் பல பாகங்களிலும் அடையாளங்காணப்பட்டு வருகின்றார்கள். எனினும் இவ்வாறான திரிபுகள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாத்திரமே காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களிலும் இந்த வசதிகளை ஏற்படுத்துமாறு நாம் வலியுறுத்தியிருந்தபோதிலும், இன்னும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அடுத்ததாக தற்போது எந்தெந்த தரப்பினருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் உரியவாறு வெளிப்படுத்தப்படுவதில்லை. முன்னர் தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புகளைப் பேணியவர்கள், தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பும் நோயாளர்கள் மற்றும் எழுந்தமான அடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன. ஆனால் தற்போது எவ்வடிப்படையில் இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவல்கள் வெளியிடப்படாத காரணத்தினால், தொற்றின் வீரியத்தை மதிப்பீடு செய்வதும் கடினமானதாக மாறியிருக்கின்றது. ஆகவே முதலில் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் அவை எந்தெந்தத் தரப்பினருக்கு மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவல்களையும் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் நாடு மிகமோசமான தொற்றுப்பரவல் நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதென்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும். குறிப்பாக வைத்தியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு சுமார் இருவருடங்களுக்கு முன்னர் அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் வைத்தியர்களுக்கு அந்தக் கொடுப்பனவு இப்போதுவரை வழங்கப்படவில்லை. எனவே அந்தக் கொடுப்பனவை வழங்குமாறுகோரி வைத்தியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடமுடியும். ஆனால் தற்போதைய நெருக்கடி நிலையில் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கத்திடம் போதியளவான நிதி இல்லை என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கின்றோம். அதுமாத்திரமன்றி அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கென ஒரு சீரான வழிமுறை உள்ளது. அதனைப் பின்பற்றாமல், உடனடியாகக் கொடுப்பனவு அதிகரிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்த அரசசேவையிலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

அடுத்ததாக அரசாங்கத்தினால் புதிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் வணக்கஸ்தலங்களுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாதபோதிலும், ஸ்பா போன்றவற்றைத் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான வழிகாட்டல்களை வெளியிடும்போது உரியவாறு பகுப்பாய்வுசெய்து ஒன்றுக்கொன்று முரணற்றவகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய விதத்திலும் வெளியிடுவது அவசியமாகும். அதுமாத்திரமன்றி சுகாதாரப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், அவை உரியவாறு இறுக்கமாகப் பின்பற்றப்படாமையை அவதானிக்கமுடிகின்றது.

உலகின் அநேகமான நாடுகளில் கொவிட் – 19 வைரஸின் புதிய திரிபுகள் பரவ ஆரம்பித்து 2 – 3 மாதகாலத்தின் பின்னரே அதன் மோசமான தாக்கங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. எனவே தற்போது எமது நாட்டிலும் டெல்டா வைரஸ் திரிபுகள் இனங்காணப்பட்டுவரும் நிலையில், இருமாதகாலத்தின் பின்னர் இதன் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும். ஆகவே இவ்வனைத்து விடயங்களையும் மனதிலிருத்தி, பொதுமக்கள் உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related Posts