Ad Widget

இராணுவம் வெளியேறினால் விகாரைகளுடன் செல்ல வேண்டும்

வடமாகாணத்தில் 2018ஆம் ஆண்டில் இராணுவம் இருக்காது என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அது நடக்குமானால் இராணுவம் போகும் போது, விகாரைகளையும் கொண்டு செல்ல வேண்டும்’ என, வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

‘முல்லைத்தீவு மாவட்டமானது, பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர் காலத்துக்கு முன்பு எந்தவோர் இடத்திலும் சிங்கள, பௌத்த அடையாளங்கள் இருந்ததில்லை. தற்போது, இராணுவத்தினரால் 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலப்போக்கில் இது இன்னமும் அதிகரிக்கலாம். நல்லிணக்கம் என்று சத்தமாகக் கூவிக்கொண்டு, மதத்திணிப்புகள் செய்வது பொருத்தமற்றது.

கொக்கிளாயில் பௌத்தர்கள் இல்லை. ஆனால், அங்கு ஸ்ரீசம்போதி மகா விகாரை, தனியார் காணியில் முளைத்துள்ளது.

நாயாறு நீராவி ஏற்றத்தில், பிள்ளையாரைத் தூக்கிவிட்டு விகாரையுடன் புத்தரை அமர்த்தியுள்ளனர்.

மாங்குளத்தில் விகாரை, மண்ணாகண்டலில் விகாரை. ஏன், தனிச் சைவக் கிராமம் வட்டுவாகலில் விகாரை, ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத் திணைக்களக் காணியில் விகாரை என, விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படியாக எம்மவர்களின் காணிகளில் அடாத்தான முறையில் விகாரைகளை அமைத்துக்கொண்டு, நல்லிணக்கம் பேசுகிறார்கள். 2018 ஆம் ஆண்டில் வடபகுதியில் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கின்றார்.

இன நல்லிணக்கத்துக்கு அல்லது ஐ.நாவுக்கு பயந்து இது நடக்குமானால், விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும். தமிழ்ப்பகுதிகளில் விகாரைகள் இருக்க முடியாது’ என்றார்.

Related Posts