Ad Widget

இராணுவத்தினரின் தாக்குதலில் பெண் படுகாயம்; உடமைகளுக்கும் சேதம்!!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்தவர்கள் மீதும் உடைமைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (மே 8) வெள்ளிக்கிழமை பின்னிரவு இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபத் தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திள்ளனர்.

அதேவேளை தாக்குதல் நடாத்திய இராணுவத்தினர் மது போதையில் இருந்ததாகவும் , தாக்குதல் நடாத்திவிட்டு செல்லும் போது, தமது இரண்டு அலைபேசிகளையும் , இராணுவ தொப்பி ஒன்றினையும் தவறவிட்டு சென்றுள்ளதாகவும் வீட்டார் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமகனால் தாக்கப்பட்டார்.

அச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான முன்னாள் கடற்புலி போராளியான ஐங்கரன் என்பவரை தேடியே இராணுவத்தினர் சுற்றி வளைப்பில் ஈடுபட்டனர்.

அதன் போதும் அந்நபர் கைது செய்யப்படவில்லை. சுமார் நான்கு மாத காலப்பகுதியாக அவரை கைது செய்ய இராணுவத்தினர் பல வழிகளில் முயற்சித்தும் அந்நபரை இராணுவத்தினரால் கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையிலையே அவரது வீட்டிற்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு புகுந்த இராணுவத்தினர் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

பின்னணி

கடந்த தைப்பொங்கல் தினத்தன்று மாலை, வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி வந்தார் என இராணுவத்தினர் அந்த நபரைக் கண்டித்த போது, அந்த நபரின் உறவினர்கள் கூடியதால் துணிவடைந்த அவர் இராணுவச் சிப்பாயைத் தாக்கினார். சிப்பாயைத் தாக்கிவிட்டு அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பித்தனர்.

அதனை அடுத்து மறுநாள் அப்பகுதியை சுற்றிவளைத்த இராணுவத்தினர் , இராணுவ சிப்பாயை தாக்கியவரை கைது செய்ய தேடுதல் நடாத்தி இருந்தனர். அதன் போது சந்தேக நபர்கள் எவரும் கைதாகவில்லை. அவர்கள் அனைவரும் தலைமறைவாகி இருந்தனர்.

இராணுவத்தினர் சுமார் இரண்டு வார தேடுதலின் பின்னர் இராணுவ சிப்பாயை தாக்கியவர்கள் என 8 பேரை பருத்தித்துறையில் வைத்துக் கைது செய்து பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸாரினால் சந்தேக நபர்கள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து வந்த வாரங்களில் வழக்கு விசாரணைகள் நடாத்தப்பட்டு தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Posts