இரணைமடு நீரினை யாழ்ப்பாணம் வரை கொண்டுசெல்வதால் கிளிநொச்சி விவசாயிகள் எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலைகள் குறித்து யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையிடம் தாம் தெரிவித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
யாழ். ஆயருடன், ஆயர் இல்லத்தில் நேற்று (4) இடம்பெற்ற சந்திப்பிலேயே தாம் தெரிவித்ததாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
‘இரணைமடு விவகாரம் தொடர்பில் வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆய்வின் முடிவு குறித்த விடயங்களும், மாகாணசபை மேற்கொண்ட தீர்மானம் தொடர்பிலும் யாழ். ஆயரிடம் தாம் தெளிவாகக் கூறியதாகவும் இரணைமடுக் குளத்தினை வந்து பார்வையிடுமாறு ஆயருக்கு அழைப்பு விடுத்ததாகவும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தாம் ஏற்கனவே அறிந்திருப்பதாகவும் இதன் உண்மையான முழுமையான நிலைப்பாட்டினை தற்போது தாம் அறிந்து கொண்டதாகவும் யாழ்.ஆயர் தம்மிடம் தெரிவித்ததாகவும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.