Ad Widget

இயற்கை சீற்றத்தினால் நான்கு இலட்சம் பேர் பாதிப்பு;இலட்சக்கணக்கானோர் முகாம்களில்

தொடர்ச்சியாக நிலவிவருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சமாக அதிகரித்திருப்பதோடு, மூன்று இலட்சம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 94 ஆயிரத்து 775 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து மூவாயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் இரண்டு இலட்சத்து 96 ஆயிரத்து 349 பேர் இடம்பெயர்ந்து 532 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 38 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 21 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 242 வீடுகள் முற்றாகவும், இரண்டாயிரத்து 714 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் இதுவரை மூன்று இலட்சத்து மூவாயிரத்து 534 பேர் பாதிக்கப்பட்டு, இதில் இரண்டு இலட்சத்து 75 ஆயிரத்து 131 பேர் இடம்பெயர்ந்து 293 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 633 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை கேகாலை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 55 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 9 ஆயிரத்து 361 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 ஆயிரத்து 948 பேர் இடம்பெயர்ந்து, 46 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் வெள்ளம் மற்றும் மழை காரணதாக 37 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் ஆயிரத்து 192 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, யாழ் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஐயாயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 863 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Related Posts