Ad Widget

இம்முறை பெண் வாக்காளர்கள் அதிகம் -யாழ் அரச அதிபா் தகவல் !

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் தகுதி பெற்ற 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேரில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 186 பேர் பெண் வாக்காளர்கள் என யாழ். மாவட்ட செயலாளரும் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம், வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ள யாழ். மாவட்ட வாக்காளர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் சந்திப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,இம்முறை தேர்தலில் யாழ். மாவட்டத்திலிருந்து 2 இலட்சத்து 15 ஆயிரத்து 946 ஆண் வாக்காளர்களும், 2 இலட்சத்து 34 ஆயிரத்து 186 பெண் வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

இவர்களில் 8623 பேர் புதிய வாக்காளர்களாக இருக்கின்றனர். தபால் மூல வாக்களிப்புக்கு 14,328 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் 526 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன, 36 பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களும் 8 தபால் மூலமான வாக்குகள் எண்ணும் நிலையங்களும் என மொத்தமாக 44 வாக்கெண்ணும் நிலையங்கள் செயற்படவுள்ளன.

தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்குசீட்டு கடந்த 15ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 23, 24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்திலும், சாவகச்சேரி, பருத்தித்துறை, வேலணை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு நிலையங்களிலும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என அவர் கூறினர்.

Related Posts