Ad Widget

“இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு” அமைக்கப்படல் வேண்டும் ஈ.பி.டி.பி. முன்மொழிவு!

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 11 ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக, இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு” ஒன்று அமைக்கப்பட வேண்டும். இன, மத முரண்பாடுகளை வளர்ப்போர் மீது விசாரணை செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளதாக இருத்தல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்மொழிந்துள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள 19வது அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்வைத்துள்ள முன்மொழிவுகளில் மேலும், ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் அரசியல் அமைப்பு பேரவையின் 5 உறுப்பினர்களில் தமிழர் ஒருவரும், முஸ்லிம் ஒருவரும் அடங்குதல் வேண்டும்.

அரசியல் அமைப்பு பேரவையினால் சிபாரிசு செய்யப்படும் 11 ஆணைக்குழுக்களுக்குமான உறுப்பினர்கள் தெரிவில் இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்குகள் உச்ச மற்றம் மேல் நீதிமன்றங்களில் எடுத்துக் கொள்ளப்படும்போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிமன்ற பதிவேடுகள் தமிழில் இருப்பதனால், வழக்குகளை நடாத்துவதில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு ஜனபதிபதியினால் நீதிபதிகள் நியமிக்கப்படும்போது, அந் நீதிமன்றங்களில் எவ்வேளையிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் ஒருவர் நீதிபதியாக இருக்கக்கூடிய வகையில் அந்நியமனங்கள் அமைய வேண்டும்.

அதே நேரம், தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரும்போது, யுத்த சூழலால் பாரிய இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளதையும், இயற்கை நியதிகளுக்கு மாறாக பாரியளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதையும் கருத்திற்கொண்டு, அதனை ஈடு செய்யும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அமைதல் வேண்டும்.

அத்துடன், இலங்கை வாக்குரிமை பெற்றிருந்த நிலையில் புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இலங்கையர்களுக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் ஆகிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts