Ad Widget

இன்று பிரதான கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்! – யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு.

பிரதான கட்சிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத கூட்டம் கூடுதல், வேட்புமனு தாக்கல் செய்வதை தடைசெய்தல், இடையூறு செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண பொலிஸார் தடை விதித்துள்ளதுடன் அதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் நாம் தடை விதிக்கின்றோம். எனவே கட்சிகளோ அல்லது கட்சி ஆதரவாளர்களோ சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், இடையூறு விளைவித்தல், தடைசெய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு செய்யும் சந்தர்ப்பத்தில் பாரபட்சம் காட்டாது உயரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதால் ஏ-9 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும். அத்துடன் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளது நன்மை கருதி இன்று காலை 8.30 மணிமுதல் மாலை வரை மாவட்ட செயலக வீதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடமும் பயணிகள் மற்றும் வாகன சாரதிகளிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதற்கமைய யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் செல்லும் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 வீதி வழியாக வந்து பழைய பூங்கா வீதியால் வலப்பக்கம் திரும்பி சுண்டுக்குழி சந்தியை அடைந்து அங்கிருந்து கொழும்புத்துறை வழியாக சென்று மாம்பழம் சந்தியினை அடையமுடியும் அங்கிருந்து ஏ-9 வீதி வழியாக பயணிக்கலாம்.

அதேபோல வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பயணிகளும் வாகன சாரதிகளும் புங்கன்குளம் வீதியால் வந்து வலப்பக்கமாக திரும்பி கொழும்புத்துறை வழியாக பஸ்ரியன் சந்தியை வந்தடைந்து மீண்டும் ஏ-9 வழியாக யாழ்ப்பாணத்தை வந்தடைய முடியும். எனவே பயணிக்கும் அனைவரும் போக்குவரத்து நடைமுறைகளை கவனத்தில் கொண்டு எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts