Ad Widget

இனவாதத்தை மறந்து பிரச்சினை தீர்க்க பிரதமர் அழைப்பு: 26ல் பட்ஜெட்!

இனவாதத்தை கைவிட்டு அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஐக்கியமான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு இன்று (20) இடம்பெற்ற வேளை விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

எதிர்வரும் 26ம் திகதி புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படும் எனவும் அதில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேசியப் பிரச்சினை விடயத்தில் விமல் வீரவன்ச போன்று இனவாதம் பேசாமல் அவற்றை மறந்து அனைவரும் ஒன்றியை வேண்டும் எனக் கூறிய பிரதமர், மஹிந்த ராஜபக்ஷவை இல்லாது செய்தது போன்று எஞ்சியிருப்பதையும் இல்லாது செய்ய வேண்டாம் என விமல் வீரவன்சவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளதையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தகவல் அறிவும் சட்டத்தினை புதிய அரசு நிறைவேற்றும் என்றும் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொண்டு சனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றத்திற்கு சென்றமையானது விஷேட அம்சமாகும்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர்.

புதிய சபை முதல்வராக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்லவும், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் முதற் தடவையாக செயற்பட்டுள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், முன்னர் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இன்று எதிர்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர்.

ஆளும் கட்சியின் முதல் வரிசையில், அமைச்சர்களான, கருஜயசூரிய, ரவூப் ஹக்கீம், ஜோசப் மைக்கல் பெரேரா, காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க மற்றும் லக்ஷ்மண் கிரியெல்ல ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

இதே வரிசையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அமர்ந்திருந்ததாக எமது நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி உறுப்பினர்களின் முதல் வரிசையில் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, ஆறுமுகன் தொண்டமான், எஸ்.பீ திசாநாயக்க, சுமேதா ஜீ ஜயசேன, பீ.தயாரத்ன, முன்னாள் பிரதமர்களான டி.எம் ஜயரட்ண ரத்னசிறி விக்ரமநாயக்க ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
இதுதவிர, எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் டபிள்யூ.டீ.ஜே செனவிரட்ண, முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் தேவாநந்தா, ஏ.எல்.எம் அதாவுல்லா, திஸ்ஸ விதாரன, டியூ குணசேகர, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

இதனிடையே, எதிர்கட்சி ஆசனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான, சுரேஷ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராஜா, ஜே.வீ.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர குமார திசாநாயக்க, விஜித ஹேரத் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

பாராளுமன்றில் 225 ஆசனங்கள் உள்ளன. விமல் வீரவன்ச டக்களஸ் தேவானந்தா ,அதாவுல்லா ,தினேஸ் குணவர்த்தன ஆகியோர் தமது கட்சிகளில் தனித்து இயங்க முடிவு செய்துள்ளனர் என்ற போதிலும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி நீங்கலாக பொதுசன ஐக்கிய முன்னனி (UPFA) 14 ஆசனங்களை கொண்டிருக்கின்றது. அதில் மகாசன எக்சத் பெரமுன 3 ஆசனங்களுயும் தேசிய முற்போக்கு முன்னணி 3 இனையும் ஈபிடிபி 3 இனையும் இடதுசாரிகள் 5 இனையும் தேசிய காங்கிரஸ் 1 இனையும் கொண்டுள்ளன .சிறீலங்கா சுதந்திரக்கட்சி 128 ஆசனங்களை தக்கவைத்துள்ளதுடன் அதன் தலைவராக சனாதிபதி மைத்திரி பால சிறிசேன உள்ளமையால் அவருடய சொல்லுக்கு கட்டுப்படவேண்டியநிலையில் அது உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் (2010) படி கட்சிகளின் ஆசன முடிவுகள்

பொதுசன ஐக்கிய முன்னணி (UPFA) -144
ஐக்கிய தேசிய கட்சி – 60
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு -14
சனநாயக தேசிய கூட்டமைப்பு (DNA )- 7

Related Posts