Ad Widget

இனப் பிரச்சினைக்கு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே தீர்வு!

“இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா. நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு அமைக்கப்படும் தேசிய அரசே 13ஆவது அரசமைப்புத் திருத்தம், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் பிரதான பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்யும். இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Maithri-my3

பத்திரிகை ஆசிரியர்கள், ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துகொண்ட ஜனாதிபதியுடனான சந்திப்பு நேற்று கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வழமையான பாணியில் அமைதியாக வந்து ஜனாதிபதி மைத்திரிபால உரையாற்றினார். உரை முடிவில் கேள்விகளுக்கும் பதிலளித்தார். தேசிய அரசு, தேர்தல் திருத்தம், புலம் பெயர் அமைப்புகள் உட்படப் பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி கருத்துத் தெரிவித்ததுடன் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

சமீபத்தில் மேற்கொண்ட இந்திய, பிரிட்டிஷ் விஜயங்கள் குறித்தும் அவர் பிரஸ்தாபிக்கத் தவறவில்லை. ஜனாதிபதி தனது உரையிலும் கேள்விகளுக்கு அளித்த பதில்களிலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:

“19ஆவது அரசமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றபின்பு பொதுத் தேர்தல் நடத்தப்படும். தேர்தலின் பின்பு சகல கட்சிகளையும் கொண்ட தேசிய அரசு அமைப்பதே எமது குறிக்கோள். ஆகவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேசிய அரசொன்றை அமைப்பதற்கு மக்களின் ஆணையைப் பெறுவதை பிரதான நோக்கமாகக் கொண்டு தமது பிரசாரங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.

இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண்பது அவசியமானது. இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தபோது அங்கு நடத்திய சந்திப்புகளின்போது எமது நாடு எதிர்நோக்கும் ஆபத்தான நிலைமையை உணரக்கூடியதாக இருந்தது. அப்படியான சூழ்நிலை ஏற்பட நாம் இடமளிக்க முடியாது. பேச்சுகளின் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம். அமைதியான இலங்கையைக் கட்டியெழுப்ப சகல தரப்பினரும் இணைந்து எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்” – என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டீர்கள். அப்படியானால் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படிச் செயற்படப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், “நான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்தான் இருக்கிறேன். எதிர்காலத்தில் தேர்தலில் பங்குபற்றுவேன். ஆனால், கீழ்த்தரமான தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை” என்று கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தீங்கு ஏற்படும் விதத்தில் செயற்படப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார். தமது பிரிட்டிஷ் பயணத்தின்போது பிரிட்டிஷ் பிரதமர் தமது வாகனத்துக்கு அருகில் வந்து தம்மைக் கரிசனையுடன் வரவேற்றார் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அண்மையில் நீங்கள் லண்டன் சென்றிருந்தபோது அங்கு நீங்கள் சந்தித்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களில் ஒரு பிரிவினர் இலங்கைக்கு மீண்டும் வந்து முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், இலங்கை வந்தால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாம் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அவர்களுக்கு நீங்கள் சொல்லப்போவது என்ன என்ற கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், “புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு சுதந்திரமாக வரலாம். சுதந்திரமாக முதலீடு செய்யலாம். எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்பும் கடமை அனைவருக்கும் உண்டு. இதில் இனவாதம் கிடையாது. எனது லண்டன் விஜயத்தின்போது ஒரு சிறு பிரிவினர்தான் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களின் நடத்தைக்கு என்னைச் சந்தித்த புலம்பெயர் தமிழ் அமைப்பினர் கவலை தெரிவித்தனர். ஆகவே, முன்னைய நிலைமை இன்று இல்லை. எம்முடன் சேர்ந்து இயங்க புலம்பெயர் தமிழர்கள் விருப்பமாக உள்ளனர்” – என்றார்.

மற்றொரு கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை பிற்போடப்பட்டது இலங்கைக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.

Related Posts