இந்தியா வருமாறு முதலமைச்சருக்கு அவசர அழைப்பு?

vicky0vickneswaranவடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை புதுடில்லிக்கு அவசரமாக அழைத்துப் பேசும் முயற்சியில், இந்திய வெளிவிவகார அமைச்சும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு தமிழ் இணையத் தளம் ஒன்று செய்தி பிரசுரித்துள்ளது. அந்தச் செய்தியின் விவரம் வருமாறு:-

இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றிய கரிசனை மற்றும் இந்தியாவினது மூலோபாய நலன்கள் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு சமநிலையை உருவாக்குவதற்காக, வடக்கு மாகாண முதல்வரை கூடிய விரைவில் புதுடில்லிக்கு அழைப்பதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு முயற்சித்து வருகிறது.

கடந்த மாதம், ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்களிப்பில் இந்தியா பங்கேற்காமல் விட்ட பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த அவசர முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ்நாட்டில், இன்னும் இரு தினங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலுக்கு முதல் நாள் புதுடில்லிக்கு வருமாறு மாநில காங்கிரஸ் பிரிவு, விக்னேஸ்வரனுக்கு மீண்டும் அழைப்பை விடுத்துள்ளதாக, முதல்வரின் முக்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செல்வாக்கு உண்மையிலேயே அபூர்வமான விடயம் என்றும், இது நீடிக்கும் என்று நம்புவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், வடக்கு மாகாண முதல்வர் தமது பயணத்தை இன்னமும் முடிவு செய்யவில்லை. வடக்கு முதலமைச்சர் இந்தியாவில் சில தலைவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். குறிப்பாக தமிழநாடு முதல்வர் ஜெயல்லிதாவை சந்திக்க அவர் விரும்புகிறார். எனினும், அவரைச் சந்திப்பதற்கான நேரம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விக்னேஸ்வரன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டால், இலங்கைதொடர்பான தமது கொள்கைகளை சமப்படுத்த அது உதவும் என்றும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்காளிக்காது போனாலும், இலங்கைத் தமிழர்களைக் காக்க நாம் பாடுபடுகிறோம் என்று கூறுவதற்கு அது உதவும் என்றும் மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்னர் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பயணம் மேற்கொள்வது, இலங்கைத் தமிழர்களின் நலனின் காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை கொண்டுள்ளது என்பதை காட்டுவதற்கு உதவும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

இவ்வாறு தமிழ் இணையத் தளச் செய்திகள் மேலும் தெரிவித்தன.

Related Posts