Ad Widget

இந்திய மகப்பேற்று சிகிச்சை சேவைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

சென்னை காமாட்சி வைத்தியசாலையின் வைத்திய ஆலோசனை சேவையை இனி யாழ்ப்பாணத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளரும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான ரி.சி.சிவரஞ்சனி தெரிவித்துள்ளார்.

prana medical 6665d

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்தியாவுக்குச் சென்று வைத்தியமுறைகள் மூலம் குழந்தைப் பேற்றினைப் பெறுகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

இலங்கையில் இருந்தும் அதிகளவானவர்கள் இந்தியாவிற்குச் சென்று சிகிச்சை பெற்று குழந்தைப் பேற்றினைப் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி மருத்துவமனையின் ஓர் அங்கமாக இயங்கி வருவரும் பிராணா என்ற கருத்தரிப்பு நிலையத்தின் ஊடாக குழந்தையில்லாதவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மூலம் குழந்தைப்பேற்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களுடைய சேவையினை விஸ்தரிக்கும் நோக்கில் யாழ். மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்ட பணிப்பாளர் மற்றும் பிரதி தலைவர் ஆகியோர் தங்களுடைய ஆரம்பக் கட்ட சேவையை பலாலிவீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள லாவா தனியார் மருத்துவமனையில் நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காமாட்சி மருத்துவமனையின் வைத்திய நிபுணர் சிவரஞ்சலி தெரிவித்தாவது:-

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக எங்களுடைய சேவையை இன்று (13.11.2014) முதல் ஆரம்பித்துள்ளோம். இன்று காலை ஆலோசனை நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அதற்கு குழந்தைப்பேறு இல்லாத பலரும் வந்திருந்தார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டேன். எதிர்வரும் காலங்களில் லாவா வைத்தியசாலை ஊடாக ஆரம்பக் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான செயற்பாடுகள் குறித்து ஒன்லைன் மூலம் நாம் ஆலோசனைகளை இங்குள்ள வைத்தியருக்கு வழங்குவோம்.

இதனால் இங்கேயே சிகிச்சை பெற முடியும் என்றால் சென்னைக்கு வரவேண்டிய செலவு தவிர்க்கப்படும். ஆலோசனைகள் இலவசமாகவே வழங்கப்படவுள்ளன. மேலதிக பரிசோதனை எனின் சென்னைக்கு வந்து மேற்கொள்ள முடியும்.

மேலும் பலர் குழந்தைப்பேறு இல்லை என்றவுடன் பெண்கள் மீதே பழிசுமத்துகின்றனர். ஆனால் குழந்தைப்பேறு இல்லாமைக்கு ஆண்களும் காரணமாக இருக்கின்றனர். எவ்வாறாயினும் பெண் எனின் 40 வயதிற்கு உட்பட்டவர்களே கருவைச் சுமக்கும் வாய்ப்பைக் கொண்டவராவர். ஆணிற்கு வயது குறிப்பிட முடியாது.

எங்களுடைய நோக்கம் என்னவெனில் நல்லசேவையைக் குறைந்த செலவில் வழங்குவதாகும். எனவே இங்குள்ளவர்கள் லாவா வைத்தியசாலைக்கு வந்து ஆலோசனைகளைப் பெற்றுச் செல்ல முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts