Ad Widget

இந்திய அரசு வழங்கிய உழவு இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை – விவசாய அமைச்சர்

Ainkaranesanவடமாகாணத்தின் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்திய அரசால் வழங்கப்பட்ட உழவூர்திகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் வெய்யிலிலும் மழையிலும் கிடந்து பழுதடைந்து கொண்டிருப்பதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கமநலசேவைகள் திணைக்களத்தைக் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை (21.04.2014) யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்தை முடக்குகின்ற வகையிலேயே மத்திய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. கமநலசேவைகள் திணைக்களம் பொருளாதார அமைச்சின் கீழ் தற்போது உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தத் திணைக்களம் மாகாண விவசாயத் திணைக்களத்துடன் ஒத்திசைந்து செயற்பட மறுக்கிறது. கமநலசேவைகள் திணைக்களத்தின் கீழ் வருகின்ற விவசாய சம்மேளனங்கள் பல இடங்களில் பல வருடங்களாகத் தேர்தல் நடாத்தப்படாமல் செயற்திறன் குன்றியவையாக உள்ளன.

இந்திய அரசாங்கம் வடமாகாணத்துக்கென வழங்கிய 500 உழவூர்திகளும் கமநலசேவைகள் திணைக்களத்தினூடாகவே விநியோகிக்கப்பட்டன. இந்த உழவூர்திகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இவற்றுக்கு உழவுப் பெட்டிகளை வழங்குவது பொருத்தமானது என்று கருதினோம். அதற்காக உழவூர்திகள் தற்போது எங்கே? எவரது பராமரிப்பில் உள்ளது? அவற்றின் பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளது? போன்ற விபரங்களைத் தந்து உதவுமாறு எனது அமைச்சின் செயலாளர் மூலம் கமநலசேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பியிருந்தோம். பல மாதங்கள் ஆகியும் உரிய பதில் கிடைக்கவில்லை. மத்திய பொருளாதார அமைச்சிடம் இருந்து மாகாண விவசாய அமைச்சுக்கு இந்தத் தகவல்களை வழங்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதேபோன்றே, மாவட்டச் செயலகத்தில் உள்ள மத்திய அரசின் மாவட்ட விவசாயப் பணிப்பாளரும் மாகாண விவசாய அமைச்சுடன் இணைந்து எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாரில்லை. பார்த்தீனியம் ஒழிப்பை மாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டுவரும் நிலையில், மாவட்ட விவசாயப்பணிப்பாளர் எங்களுடன் எந்தவித ஆலோசனையும் இல்லாமல் தனியாகச் செயற்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். முதலில் இராணுவத்தைப் பயன்படுத்திப் பார்த்தீனியத்தை ஒழிக்கப் போவதாகக் கூறினார். சிவில் நடவடிக்கைளில் இராணுவத்தை வலிந்து இழுக்காதீர்கள் என்று நான் கண்டித்தேன். இப்போது செயல் இழந்து போயிருக்கும் விவசாய சம்மேளனத்தின் மூலம் செயற்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு அதிகாரிகள் மாகாணசபையின் செயற்பாடுகளை முடக்குவது அல்லது பின்தள்ளுவது போன்ற நடவடிக்கைளில் ஈடுபடாது எங்களுடன் சேர்ந்து ஒத்துழைக்குமாறு கோருகிறேன். அப்போதுதான், நாங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பயன் மக்களை முழுமையாகச் சென்றடையும் என்றும் தெரிவித்தார்.

Related Posts