Ad Widget

இந்திய அணிக்கு முதல் வெற்றி!!

சுதந்திரக் கிண்ணத் தொடரின் லீக் சுற்றின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணி நிர்ணயித்த 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 18.4 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

இலங்கையின் 70 ஆம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.

இதையடுத்து இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிடிபெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இலங்கையுடன் மோதிய அதே அணிதான் எந்த மாற்றமும் இன்றி பங்களாதேஷுடன் மோதியது.

அதன்படி பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர்.

தமீம் 15 ஓட்டங்களுடனும் சவுமியா சர்க்கார் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த பின்னர் பங்களாதேஷ் வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக லிண்டன் தாஸ் 34 ஓட்டங்களையும், ஷபீர் அஹமட் 30 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது பங்களாதேஷ்.

இந்தப் போட்டியில் இந்திய அணி உதிரிகளாக 15 ஓட்டங்களை வாரிக்கொடுத்ததுடன் நான்கு பிடியெடுப்புகளையும் தவறவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கைத் துரத்த களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் மற்றும் ரோஹித் ஜோடி களமிறங்கியது. இதில் ரோஹித் 17 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த பாண்டும் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன்பிறகு தவானுடன் இணைந்த ரெய்னா அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவினார். ஆனால் அவரும் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க முறுமுணையில் நின்ற தவான் 55 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் மணிஸ் பாண்டே மற்றும் தினேஸ் கார்த்திக் ஆகியோர் இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

Related Posts