Ad Widget

இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதில் வென்றது.

20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம், பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி நேற்று முன்தினம் இலங்கையையும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் இந்தியா தனது கடைசி லீக்கில் நேற்று (வியாழக்கிழமை) 3 தோல்வி கண்டுள்ள குட்டி அணியான ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் அஷ்வின், நெஹ்ரா, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு புவனேஷ்குமார், ஹர்பஜன் சிங், பவான் நெஹி ஆகியோ சேர்க்கப்பட்டு இருந்தனர்.

அனுபவம் இல்லாத கத்துக்குட்டி அணியான ஐக்கிய அரபு அமீரகம் எதிர்பார்த்தது போலவே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் ஷைமான் அன்வரை (43 ரன்கள்) மற்றும் ரோகன் முஸ்தபா (11 ரன்கள்) ஆகியோரை தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களை கூட எட்டவில்லை. இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி 9 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில், புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், பும்ரா ஹர்தி பாண்ட்யா, ஹர்பஜன் சிங், பவான் நெஹி , யுவராஜ் சிங் என பந்து வீசிய அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று நிதானத்தை கடைபிடித்தது. ஓரளவு அதிரடி காட்டிய ரோகித் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு எதிர்பாராத வகையில் யுவராஜ் களம் இறக்கப்பட்டார். எந்த நெருக்கடியும் இல்லாமல் ஆடிய இந்த ஜோடி 10.1 ஓவரில் வெற்றி 82 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது அனைத்து லீக் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி வரும் 6 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.

Related Posts