Ad Widget

இந்தியா வாக்களிக்காமல் விட்டமைக்கு காரணங்கள் இருக்கும் – இரா.சம்பந்தன்

sambanthan 1_CIஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் திருப்தியடைகின்றனர் என்று கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதேவேளை, இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தமை அந்த நாட்டை நம்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினருக்கும், தமிழ் மக்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 11 மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டுள்ளது என்று ஜெனிவாவில் இருந்து சற்று முன்னர் எனக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இந்தப் பிரேரணைக்கு 23 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்த நிலையில் அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இலங்கைக்கு எதிரான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

12 நாடுகள் இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்கு பற்றாமல் நடுநிலை வகித்துள்ளன. இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஜெனிவாவில் சமர்ப்பித்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும், இதனை ஆதரித்த நாடுகளுக்கும் நாம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு இங்கு நடைமுறைப்படுத்தினால் தமிழருக்கு தீர்வு மட்டுமல்ல, நாட்டில் நிரந்தர சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படும் என்று நாம் நம்புகின்றோம். இந்த நிலைமைகள் இலங்கையில் ஏற்பட வேண்டும். இதற்கு ஒத்து ழைப்பு வழங்க நாம் தயாராகவே இருக்கின்றோம். எனவே, இலங்கை அரசு இனிமேலாவது பொறுப்பாகச் செயற்பட வேண்டும்.

இந்தியாவின் முடிவு,தமிழர்கள் ஏமாற்றம்

இதேவேளை, ஜெனிவாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என்று நாம் நம்பியிருந்தோம். ஆனால், இறுதியில் இந்தியா வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்துவிட்டது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் மக்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

ஜெனிவாவில் கடந்த இரண்டு தடவைகள் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்தது. ஆனால், இம்முறை கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்காமல் விட்டமைக்கு காரணங்கள் இருக்கும். அதனை நாம் இந்தியாவிடம் கேட்டறிவோம் என்றார்.

Related Posts