Ad Widget

இந்தியா–இலங்கை மோதல் இன்று

ராஞ்சியில் இன்றிரவு நடக்கும் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–இலங்கை அணிகள் மோதுகின்றன. முந்தைய தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியாவுக்கு வந்துள்ள தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா–இலங்கை இடையிலான 2–வது 20 ஓவர்போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

முதலாவது ஆட்டத்தில் 20 ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்காமல் இந்திய அணி 101 ரன்களில் சுருண்ட விதம் பலத்த விமர்சனத்தை கிளப்பியது. ‘‘இலங்கையின் புதுமுக பந்து வீச்சாளர்கள் நமக்கு போதிய பரிட்சயம் இல்லாதவர்கள். எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் சற்று நிதானமாக கணித்து ஆடியிருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் ஆடியதை போலவே இங்கு ஆட வேண்டும் என்று நினைத்து விளையாடியது தவறு. இலங்கை பவுலர்களுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து ஆடியிருக்க வேண்டும்’’ என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடினார்.

எனவே இந்த ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக ஆடுவார்கள் என்று நம்பலாம். குறிப்பாக கடந்த ஆட்டத்தில் புரட்டியெடுத்த இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ரஜிதா, சமீரா, ஷனகா ஆகியோரை கவனமுடன் எதிர்கொள்வார்கள்.

இந்திய அணியில் அனேகமாக ஒரு மாற்றம் இருக்கலாம். ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளரும், ஆல்–ரவுண்டருமான பவான் நெகி அறிமுக வீரராக இறக்கப்படலாம்.

இது இந்திய கேப்டன் டோனியின் சொந்த ஊராகும். இங்கு சர்வதேச 20 ஓவர் போட்டி அரங்கேற இருப்பது இதுவே முதல் முறையாகும். டெல்லியில் நடக்க இருந்த இந்த ஆட்டம் சமீபத்தில் தான் ராஞ்சிக்கு மாற்றப்பட்டது. ஆதலால், குறைந்த கால அவகாசத்தில் ஆடுகளத்தை எப்படி தயாரித்து இருப்பார்கள் என்பதை போட்டியின் போது தான் கணிக்க முடியும்.

எது எப்படியோ, எஞ்சிய இரு ஆட்டத்தில் வென்றால் மட்டுமே 20 ஓவர் அணிகளின் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைக்க முடியும் என்ற நெருக்கடியில் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இலங்கை அணியை பொறுத்தவரை முதலாவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் புது உத்வேகம் அடைந்துள்ளனர். அதே வேகத்தை இன்றைய ஆட்டத்திலும் தொடரும் முனைப்புடன் உள்ளனர். கையில் ஏற்பட்ட காயத்தால் தொடக்க ஆட்டத்தில் விளையாடாத மூத்த வீரர் தில்ஷன் இன்று களம் காணுவது அவர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், டோனி (கேப்டன்), பவான் நெகி அல்லது ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அஸ்வின், நெஹரா, பும்ரா.

இலங்கை: தில்ஷன், குணதிலகா, சன்டிமால் (கேப்டன்), கபுகேதரா, தசுன் ஷனகா, ஸ்ரீவர்த்தனா, திசரா பெரேரா, பிரசன்னா, செனநாயக்கே, சமீரா, கசுன் ரஜிதா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Related Posts