Ad Widget

இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்கிஸ்தான்

‘டுவென்டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் விராத் கோஹ்லி அரை சதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்தியாவில் ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ‘பிரிவு-2’ லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

மழை பெய்ததால், போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. போட்டி தலா 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

பாகிஸ்தான் அணிக்கு ஷார்ஜல், ஷேசாத் ஜோடி மந்தமான துவக்கம் தந்தது. ஷார்ஜல் 17, ஷேசாத் 25 ரன்கள் எடுத்தனர். பாண்ட்யா பந்தில் கேப்டன் அப்ரிதி (8) சிக்கினார். ஜடேஜா ‘சுழலில்’ அக்மல் (22) வெளியேறினார். மாலிக் 26 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. சர்பராஸ் (8), ஹபீஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் (10), தவான் (6) சொதப்பினர். ரெய்னா ‘டக்-அவுட்டானார்’. பின் இணைந்த கோஹ்லி, யுவராஜ் ஜோடி பொறுப்புடன் செயல்பட்டது. யுவராஜ் 24 ரன்கள் எடுத்தார். கோஹ்லி அரை சதம் விளாசினார். தன் பங்கிற்கு தோனி ஒரு சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 15.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. கோஹ்லி (55), தோனி (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

Related Posts