Ad Widget

இடியுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்கும் – மக்களே அவதானம்

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts