Ad Widget

இங்குள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னரே இந்தியாவில் உள்ள அகதிகள் குடியேற்றப்படுவர்!

இங்குள்ள மக்களை மீள்குடியேற்றிய பின்னரே இந்தியாவில் உள்ள அகதிகள் மீள்குடியேற்றப்படுவார்கள் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

DM-Suwamynathan

இன்று வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டு வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு வருகைதந்த அவர் அங்குள்ள மக்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் –

வடபகுதி உள்ளிட்ட இப்பகுதி மக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பான நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நாம் கதைத்துப் பேசி காலத்தை கடத்தாமல் இங்குள்ள மக்கள் விரும்பும் படியாக பேசி தீர்வு காணவேண்டும்.

உங்களுக்குள் இணக்கப்பாடு ஏற்பட்டால் அதனை இலகுவாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் பேசி தீர்க்கலாம் எனத் தெரிவித்தார். இதன்போது இந்தியாவில் இருந்து அகதிகளை மீள அழைப்பது தொடர்பாக தங்கள் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் கேட்ட போது –

வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் பலர் உள்ளனர். அவர்களுடைய மீள்குடியேற்றம் மற்றும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே இந்திய அரசின் உதவியுடன் அங்குள்ள எமது நாட்டு அகதிகள் மீள்குடியேற்றப்படுவர்.

அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் பட்சத்திலேயே அவர்களை மீள்குடியேற்ற முடியும் – என்றார். கடந்த காலத்தில் வீட்டுத் திட்டம் தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றதாக தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தங்களின் ககருத்து என்ன என கேட்ட போது –

வீட்டுத் திட்டங்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன. அவை சரியாகதான் வழங்கப்பட்டன. இங்குள்ள அரச அதிகாரிகளே அதனை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். அதனை தீர்ப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும் – என்றார்.

பூந்தோட்டம், சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்ட போது –

வவுனியா பூந்தோட்டம், சிதம்பரபுரம் முகாம் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களின் இணக்கப்பாட்டுடன் அரச அதிகாரிகளுடனும் கதைத்து இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என எமக்கு தெரியும். கடந்த காலத்தைப் போல் பேசி பேசி காலத்தை கழிக்காமல் இது தொடர்பான நிலைப்பாட்டை ஆராய்ந்து தெளிவுபடுத்துமாறு கோரியுள்ளேன். அதன் பின் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார். இதன் போது வவுனியா மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். இந்த விஜயத்தின் போது வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் நுனைஸ்பாறுக் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Related Posts