Ad Widget

ஆஸ்திரேலியாவை நொறுக்கி அரைஇறுதிக்குள் நுழைந்தது இந்தியா

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை நொறுக்கியெடுத்து இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்டன.

இந்த நிலையில் அரைஇறுதிக்குள் நுழையப்போகும் எஞ்சிய இன்னொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான லீக் ஆட்டத்தில் (குரூப்2) இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மொகாலியில் நேற்றிரவு கோதாவில் குதித்தன. இரு அணியிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி உஸ்மான் கவாஜாவும், ஆரோன் பிஞ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய கவாஜா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய 2-வது ஓவரில் 4 பவுண்டரிகள் விரட்டியடித்தார். உடனடியாக கொண்டு வரப்பட்ட அஸ்வினின் சுழலை பதம் பார்த்த ஆரோன் பிஞ்ச் 2 சிக்சர்களை பறக்க விட்டார். அந்த ஓவரில் 2 வைடு, எக்ஸ்டிரா வகையில் ஒரு பவுண்டரி என்று மொத்தம் 22 ரன்களை அஸ்வின் வாரி இறைத்தார். 4 ஓவருக்குள் ஆஸ்திரேலியா 53 ரன்களை திரட்டி மலைக்க வைத்தது. இதனால் அந்த அணி 200 ரன்களை நெருங்கும் என்றே தோன்றியது.

ஆனால் மிடில்ஓவர்களில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. கவாஜா 26 ரன்களில் (16 பந்து, 6 பவுண்டரி) நெஹராவின் பந்து வீச்சில் டோனியிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டேவிட் வார்னர் (6 ரன்) அஸ்வின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலியாவின் ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (2 ரன்) வந்த வேகத்தில் யுவராஜ்சிங் பந்து வீச்சில் டோனியிடம் சிக்கினார். இது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். ஆனால் பந்து பேட்டில் உரசவில்லை என்பது போல் தலையை அசைத்தபடி ஸ்டீவன் சுமித் அதிருப்தியுடன் நடையை கட்டினார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஆரோன் பிஞ்ச் 43 ரன்களில் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். 5 முதல் 14 ஓவர்கள் இடைவெளியில் ஆஸ்திரேலியா 51 ரன்கள் மட்டுமே சேகரித்தது. இதையடுத்து ரன்ரேட்டை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட மேக்ஸ்வெல் (31 ரன், 28 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), பும்ரா வீசிய பந்தை விலகி நின்று துரத்தியடிக்க முனைந்த போது கிளீன் போல்டு ஆனார்.

தொடக்கத்தில் ரன்களை அள்ளிக்கொடுத்த பும்ரா இறுதி கட்டத்தில் சிக்கனத்தை காட்டினார். ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் பவுல்க்னெரின் (10 ரன்) பேட்டுக்கும் களத்தில் அதிக வேலை இல்லை. விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் (10 ரன்) கடைசி இரு பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சராக விளாசியதால் அந்த அணி ஒரு வழியாக சற்று சவாலான ஸ்கோரை அடைந்தது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 161 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் ஆட வந்தனர். இந்த ஜோடி திருப்திகரமான தொடக்கம் அளிக்க தவறியது. ஷிகர் தவான் 13 ரன்களில், கவுல்டர்-நிலே வீசிய ‘பவுன்சர்’ பந்து வீச்சுக்கு இரையானார். மற்றொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா (12 ரன்) வாட்சனின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். சுரேஷ் ரெய்னாவையும் (10 ரன்) வாட்சன் கபளீகரம் செய்தார். 49 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (7.4 ஓவர்) இழந்து இந்திய அணி சிக்கலில் தள்ளாடியது.

இந்த நெருக்கடியான கட்டத்தில் துணை கேப்டன் விராட் கோலியும், யுவராஜ்சிங்கும் கைகோர்த்து அணியை சீர்தூக்கி நிறுத்தினர். விராட் கோலி பதற்றமின்றி அற்புதமான ஆட்டத்தை வெளிக்காட்டினார். அவசரமின்றி ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார். மறுமுனையில் யுவராஜ்சிங் திடீரென தசைப்பிடிப்பால் பாதிப்புக்குள்ளானார். இதனால் அவரால் இயல்பாக ஆடவோ, ஓடவோ முடியவில்லை. அவரது தடுமாற்றம், கோலியின் உத்வேகத்தையும் குறைப்பது போல் தெரிந்தது.

அணியின் ஸ்கோர் 94 ரன்களாக உயர்ந்த போது, யுவராஜ்சிங் 21 ரன்களில் (18 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் டோனி நுழைந்தார்.

கோலியும், டோனியும் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினர். கடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டன. பவுல்க்னெர் வீசிய 18-வது ஓவரில் கோலி 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி பிரமாதப்படுத்த, அந்த ஓவரில் இந்தியா 19 ரன்களை எடுத்தது. அடுத்து கவுல்டர் நிலே வீசிய 19-வது ஓவரில் கோலி, 4 பவுண்டரிகள் சாத்தியெடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இதையடுத்து கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 4 ரன்னே தேவைப்பட்டது. 20-வது ஓவரை வீசிய பவுல்க்னெரின் முதல் பந்தை டோனி பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார்.

இந்திய அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோலி 82 ரன்களுடனும் (51 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), டோனி 18 ரன்களுடனும் (10 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர். இந்த 3-வது வெற்றியின் மூலம் இந்திய அணி அரைஇறுதி சுற்றை எட்டியது. ஆஸ்திரேலியாவின் கனவு கலைந்தது. இந்த ஆட்டத்துடன் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்திய அணி அரைஇறுதியில் வருகிற 31-ந்தேதி வெஸ்ட் இண்டீசுடன் மோதுகிறது.

Related Posts