Ad Widget

ஆளுனருக்காக பரிந்து பேசிய அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம்!

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநர் செயலகத்திற்கான  நிதி ஒதுக்கீட்டை எதிர்ப்புக்கள் மத்தியில் அங்கீகரிக்க வைத்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணைகள் இன்று காலை வடமாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மதிய போசன இடை வேளையினை அடுத்து இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது ஆளுநர் செயலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆளும் கட்சியினர் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர். ஆளும்கட்சி உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குறித்த சபையில் ஆளுநர் அலுவலக நிதிஒதுக்கீட்டு விவகாரம்  வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதனை உறுப்பினர் அனந்தி வழிமொழிந்தார்.

இருப்பினும் கோரிக்கையை நிராகரித்த அவைத்தலைவர் அதனை வாக்கெடுப்புக்கு விடமுடியாது என கூறி நிபந்தனையுடன் ஆளுநர் செயலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இந்த சபை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

வடக்கு முதல்வர் அலுவலகத்திற்கு வெறும் 7கோடி மட்டும் ஒதுக்கப்பட்ட போதும் ஆளுநரிற்கு 13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிதி அதிகரிப்பு தவறுதலாக நடந்து விட்டதாக கூறிய சீ.வி,கே.சிவஞானம் அடுத்த ஆண்டில் தவிர்க்கவுள்ளதாகவும் இம்முறை ஒத்துழைக்குமாறும் கோரியதாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Posts