Ad Widget

ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனையை குறைக்குமாறு வேண்டுகோள்

lloud.-speekerதற்போது க.பொ.த. உயர்தர மாணவர்களும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் பரீட்சைகளுக்காக தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் யாழ். மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்கள் தமது ஒலிபெருக்கி பாவனையை குறைத்துக்கொள்ளுமாறு இந்து மகாசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்து மகாசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்.குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் தினமும் பக்திப் பாடல்களை ஒலிக்கவிடும் செயற்பாடு தற்போது தலைதூக்கி வருகின்றது. ஓரிரு ஆலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்தச் செயற்பாட்டை தற்போது மேலும் பல ஆலயங்கள் பின்பற்றி வருகின்றன. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற மரபுக்கு இணங்க எமது மக்கள் வாழ்கின்ற இடமெங்கும் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடு இடம்பெறுகின்றமை வரவேற்கத்தக்கது.

ஆனால், வழிபாடு என்ற பெயரிலும் பக்தி என்ற பெயரிலும் ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடுவதென்பதை எமது இந்து சமயம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அமைதியான முறையில் இறைவனைத் தியானம் செய்வதே எமது மதத்தின் உண்மைத் தத்துவமாகும். ஆனால், ஆலயங்களில் அதிக சத்தத்தில் ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடுவதானது எமது சமயத்திற்கு ஒவ்வாத செயற்பாடாகும்.
இதேவேளை, ஆலயங்களில் இந்த ஒலிபெருக்கிகளின் பயன்பாடு காரணமாக தாங்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படுவதாக மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்விச் சமூகத்தினர் இந்து மகா சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதைவிட இந்த சத்தத்தால் நோயாளர்களும் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வதாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது க.பொ.த. உயர்தர மாணவர்களும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் பரீட்சைகளுக்காக தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆலயங்கள் தமது ஒலிபெருக்கி பாவனையை குறைத்துக்கொள்ளுமாறு இந்து மகா சபை வேண்டிக்கொள்கிறது.

மேலும் குடாநாட்டு ஆலயங்களில் தற்போது வருடாந்த திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஒலிபெருக்கி பயன்பாட்டைக் குறைத்து தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம், சித்தன்கேணி சிவன் கோயில் போன்ற ஆலயங்களை முன்மாதிரியாகக் கொண்டு மனதுக்கு இதமான மெல்லிய இசையை அமைதியான முறையில் ஒலிக்க விடுவது பக்திக்கு மெருகூட்டும்.

இந்த விடயத்தில் ஆலய பரிபாலன சபைகள் மற்றும் தர்மகர்த்தாக்கள் அதிக அக்கறை எடுக்க வேண்டுமென்றும் இந்து மகா சபை வலியுறுத்துகின்றது.

Related Posts