Ad Widget

ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு பிணை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நுண்கலைப்பீட மாணவர்கள் ஐவரையும் வெளிநபரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

மருதனார் மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவத்தினைக் கண்டித்து நுண்கலைப்பீட மாணவர்கள் நேற்று (24) போராட்டத்தில் ஈடுபட்டனர். இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட இத்தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் ஐந்து மாணவர்களை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அத்துடன், வெளிநபர் ஒருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையிலும், வார நாட்களில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிடவேண்டும் என்றும், அத்துடன் மேற்படி வழக்கினை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் ஒத்திவைத்தார்.

Related Posts