Ad Widget

ஆனைக்கோட்டையிலும் பொதுமக்களின் காணி இராணுவத் தேவைகளுக்கென சுவீகரிப்பு

aanaikoddai_notes-armyயாழ். ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 1ஏக்கர் 31பேர்ச் அளவுள்ள நிலம் இராணுவத் தேவைக்கென சுவீகரிக்கப்படவுள்ளதாக மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலகம் அறிவுறுத்தல் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட குறித்த இராணுவ முகாம் 1995ம் ஆண்டு யுத்தத்தினால் குடாநாட்டிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றதன் பின்னர் 1996ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இதனுள் 5 குடும்பங்களுக்குச் சொந்தமான காணி மற்றும் பெறுமதியான வீடுகள் உள்ளன. இந்நிலையில் 1996ம் ஆண்டு தொடக்கம் தங்களுடைய காணிகளையும், வீடுகளையும் மீளவும் தம்மிடம் வழங்கவேண்டும் என காணிக்குச் சொந்தமான மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும் இதுவரை அதற்குச் சாதகமான பதில் எதுவும் வழங்கப்படாத நிலையில், குறித்த காணிகளுக்குச் சொந்தமான மக்கள் கடந்த 17வருடங்களுக்கும் மேலாக வாடகை வீடுகளிலும், உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் 2002ம் ஆண்டு மக்களுடைய காணிகளை விடுவிக்கப் போவதாக இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். ஆனால் குறித்த இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி மாற்றலாகிச் சென்றிருந்த நிலையில் காணிகளை மக்களுக்கு வழங்கப் போவதாக இராணுவம் கூறிய பேச்சுக்கள் கைவிடப்பட்டது. சிறிது காலத்தின் பின்னர் 600 ரூபாவிலிருந்து 1500 ரூபா வரை மாதாந்தம் மாத வாடகை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் காணி அமைச்சின் 1964ம் ஆண்டின் காணி எடுத்தல் சட்டத்தின் அத்தியாயம் 460, 2ம் பிரிவின் கீழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஜே.133 ஆனைக்கோட்டை கிராமத்திலுள்ள அம்பளவன், பொன்னம்பலம் சிறீகரன், ஏ.ஜேசுதாசன், த.சுப்பிரமணியம், மேரியமுல்லை சிங்கராசர், இராயப்பு ஜேக்கப்பு ஆகியோருக்குச் சொந்தமான சுமார் 1 ஏக்கர் 31பேர்ச் அளவுள்ள நிலம் காணி அமைச்சர் கையொப்பமிட்டதன் பிரகாரம்,

சிறீலங்கா இராணுவத்தின் 11வது சிங்க றெஜீமன்ற் “பி” அணிக்கான படைமுகாம் அமைப்பதற்கென காரணம் காட்டப்பட்டு சுவீகரிக்கப்படப் போவதாக யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு அதிகாரி ஆ.சிவசுவாமி கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் பிரசுரம் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன், மூன்று மொழிகளிலுமான மேற்குறித்த அறிவுறுத்தல் கடிதத்தின் பிரதிகளுடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலரினால், காணி உரிமையாளர்களுக்கு கடந்த 22ம் திகதி பதிவு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது காணிகளை படையினருக்கு வழங்க முடியாது என தெரிவித்துள்ள காணி உரிமையாளர்கள் சொந்தமாக காணியும், வீடும் உள்ள நிலையில் கடந்த 17வருடங்களாக வாடகை வீடுகளிலும், உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் பல கஷ்டங்களுக்கும், அசௌகரியங்களுக்கும் மத்தியில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய வீடுகளை தருவதாக இவ்வளவு காலம் ஏமாற்றிய இராணுவத்தினர் இப்போது காணிகளை சுவீகரிக்கப் போவதாக கூறுகின்றனர். எங்களுக்கு எங்களுடைய நிலம் வேண்டும். வேறு மாற்று காணிகளோ, வீடுகளோ, நஷ்ட ஈடோ எமக்கு வேண்டாம் எனவும் கூறியிருக்கின்றனர்.

Related Posts