Ad Widget

ஆதன விவரம் திரட்டுகிறது வேலணைப் பிரதேச சபை

முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் வேலணை பிரதேசசபை வட்டார ரீதியாக ஆதனங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டி வருகின்றது.வேலணை 4, 5, 6ஆம் வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் தமது ஆதனங்களின் விவரங்களான உறுதி, காணி வரைபடம், குடும்ப அட்டை மற்றும் இவற்றின் பிரதிகளை வேலணை பிரதேசசபைத் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து தமது ஆதனங்களை உறுதிசெய்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்திலும், வெளிமாவட்டமான கொழும்பு, திருகோணமலை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ளவர்களும் தமது ஆதன விவரங்களைப் பதிந்து வருகின்றனர்.

இதேவேளை வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது விவரங்களை இங்குள்ள உறவினர்களுக்கு அனுப்பிப் பதிவு செய்யப்படுகின்றனர் என்று பிரதேசசபைத் தலைவர் கி.சிவராசா தெரிவித்துள்ளார். வேலணைப் பிரதேசசபைக்கு உட்பட்ட நயினாதீவு, புங்குடுதீவு, வேலணை, அல்லைப்பிட்டி மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நயினாதீவில் கடந்த மாதம் முதல் இந்தத் திட்டம் உப அலுவலகப் பொறுப்பதிகாரி மற்றும் வருமான மேற்பார்வையாளர் ஆகியோர் தலைமையில் இடம்பெறுகின்றது. கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் வேலணை உப அலுவலகப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட வேலைகள் முடிவுற்றதும் அடுத்தகட்டமாக யாழ். விலை மதிப்பீட்டுத் திணைக்கள பிரதம விலை மதிப்பீட்டாளர் கு.ஜெகநாதனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு திட்டம் பகுதி பகுதியாக முழுமைப் படுத்தப்படவுள்ளது.
எனவே, வேலணை பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் ஆதனங்களைப் பதியுமாறு சபைத் தலைவர் சி.சிவராசா கேட்டுள்ளார்.

Related Posts