Ad Widget

ஆடைகள் இன்றி வீதியில் செல்ல வேண்டும் என்பதா அவர்கள் கோரிக்கை?

அண்மையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தான் வௌியிட்ட கருத்து தொடர்பில் இணையத்தில் சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வாறு சேறு பூசுவதால் தனக்கு ஏதும் நேராது என சுட்டிக்காட்டிய அவர், இந்த நாட்டில் கலாச்சாரச் சீரழிவே ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு சேறுபூசும் நபர்கள் கோரிக்கைவிடுப்பது ஆடைகள் இன்றி வீதியில் செல்லவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தால் நாட்டின் கலாச்சாரம் எவ்வளவு குறைத்து மதிப்பிடப்படும் எனவும் தான் அவர்களிடம் கேள்வி எழுப்புவதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியைக் காண வந்திருந்த, சில பெண்கள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டிருந்ததாகவும், இளம் சமூகத்தை தவறாக வழிநடத்தக் கூடியதாக இருந்ததென்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை காணச்சென்ற பெண்ணொருவர், பாடகரின் மீது தனது உள்ளாடையை கழற்றி வீசுவது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நேற்று முன்தினம் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

Related Posts