Ad Widget

ஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: முதலமைச்சர்

ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாண சபை அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே சி.வி விக்னேஸ்வரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளிட்டவர்கள் இங்கிருப்பதால் நானும், எமது வடமாகாண கல்வி அமைச்சரும் ஒரு சில கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

மாகாண சபைகளுக்கான சட்டத்தில் கல்வி என்பது மாகாண சபைகளுக்கு பகிரப்பட்ட விடயம். இந்த நிலையில் ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாணசபையின் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவரப்பட வேண்டும். தற்போது பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மாத்திரமே மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய வகைகளை சேர்ந்த க.பொ.த உயர்தரத்தில் தகைமை பெற்றவர்கள், டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் போன்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடிய அதிகாரத்தை மத்தி தன்னிடம் வைத்துக்கொண்டுள்ளது. அந்த அதிகாரமும் மாகாணசபைகளிடமே வழங்கப்பட வேண்டும்.

வடமாகாணத்தில் செயற்படும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகள் என்பனவற்றிற்குப் பயிற்சி ஆசிரியர்களை வடமாகாணத்தின் தேவைக்கேற்ப தெரிவு செய்யும் அதிகாரம் எம்மிடம் தரப்படவில்லை. அந்த அதிகாரம் மாகாணசபைகளிடமே இருக்க வேண்டும்.

இலங்கையில் மாகாண பாடசாலைகள், தேசியப்பாடசாலைகள் என்ற இருவகையான பாடசாலை முறைமைகளை அரசாங்கம் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது.

தேசிய பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழும், மாகாணப்பாடசாலைகள் மாகாண சபையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நிலையில் மாகாண பாடசாலைகளை பாதிக்கும் பல செயற்பாடுகள் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாகாண பாடசாலைகளில் கல்வி பயின்று கொண்டிருக்கின்ற மாணவர்களை அதிக அளவில் தேசிய பாடசாலைகளில் அனுமதிப்பதற்காக தேசிய பாடசாலைகளின் வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், மேலும் தேவைக்கு அதிகமான ஆசிரியர்களை நியமித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மாகாணத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றன’ என தெரிவித்துள்ளார்.

Related Posts