Ad Widget

ஆசியாவின் ஆச்சரியமாக அன்றி அழிவு ஆகவே இலங்கை தோற்றம் பெறும்; தமிழ்க் கூட்டமைப்பு எச்சரிக்கை

தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசம் வழங்கும் சந்தர்ப்பங்களை இலங்கை அரசு தொடர்ந்தும் தட்டிக்கழிக்குமானால், இந்த நாட்டை சர்வதேச சமூகம் உலகில் நிராகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிடக் கூடும். அதுமட்டுமன்றி, தமிழர்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயலாமல் அரசு தொடர்ந்தும் போர் வெற்றி மமதையில் இருக்குமானால், ஆசியாவின் ஆச்சரியமாக அன்றி “அழிவு’ ஆகவே இலங்கை தோற்றம் பெறும்.

இவ்வாறு எச்சரித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஜெனிவாவில் தமிழ்மக்களின் பிரச்சினைகள் இம்முறை விவாதிக்கப்படலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகத் தெரிவித்துள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும்பொருட்டு அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுவந்த பேச்சுகள் தெரிவுக்குழு விவகாரத்தால் தடைப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமது பிரதிநிதிகளின் பெயர்களைப் பரிந்துரை செய்யும்வரையில் பேச்சைத் தொடரப்போவதில்லை என்று அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளதுடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினூடாகவே தீர்வு வழங்கப்படும் என்றும் ஆணித்தரமாக அது இடித்துரைத்துள்ளது.

அரசு இவ்வாறு கூறினாலும், பேச்சில் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னரே தெரிவுக்குழு குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஆணித்தரமாகத் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ள கூட்டமைப்பு, பேச்சில் எட்டப்படும் இணக்கப்பாட்டைப் பரிசீலிப்பதாகவே தெரிவுக்குழு அமையவேண்டும் என்றும் அடித்துக் கூறுகிறது.

இவ்வாறானதொரு நிலையில், கூட்டமைப்பின் பேச்சை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டுள்ள அரசு, தெரிவுக்குழு அமைக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றது.

இந்நிலையில், தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவென்பது தொடர்பிலும், அது விடயத்தில் சர்வதேசத்தின் கரிசனை எவ்வாறுள்ளது எனவும் கேட்டபோதே கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவென்பது தொடர்பாக நாம் இன்னும் பரிசீலிக்கவில்லை. விரைவில் நாம் கூடி ஆராய்வோம். நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் காலப்பகுதியில் இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடப்படும்.

தமிழர்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்களை இந்தியா உட்பட சர்வதேச சமூகமும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. எனவே, தமிழர் விவகாரத்தில் சர்வதேசம் கரிசனை கொண்டுள்ளது என்றே நாம் நம்புகின்றோம்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், அடக்குமுறை உட்பட தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரங்கேற்றப்படும் கொடூரங்கள் இன்று சர்வதேச அளவில் பேசப்படுவதுடன், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேசம் வழங்கிய சந்தர்ப்பத்தை இலங்கை அரசு தொடர்ந்தும் தட்டிக்கழித்து காலத்தை கடத்துமானால், உலகில் நிராகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டு ஓரங்கட்டப்படலாம்.

இந்நிலை நீடிக்குமானால், முதலீடுகளை மேற்கொள்வதற்கு எவரும் முன்வரமாட்டார்கள். இதனால், பொருளாதார ரீதியான பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடலாம்.

ஜெனிவா மாநாட்டில் சர்வதேசம் தொடுக்கும் கேள்விகளுக்குப் பதிலடி கொடுக்கத் தயார் என இலங்கை அரசு மார்தட்டி வருகின்றது. தொடர்ந்தும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் சர்வதேச அழுத்தங்கள் குவிந்த வண்ணமிருக்கும்.

ஜெனிவா கூட்டத்தொடரில் இம்முறை தமிழர்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்படலாம். எனவே, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விடயத்தில் அரசு காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியத்தைக் கையாண்டால், சர்வதேச அழுத்தங்கள் அதனை வாட்டிவதைக்கும்.

போர் முடிவடைந்து மூன்று வருடங்களானாலும், அரசு இன்னும் போர்வெற்றி மமதையிலேயே உள்ளது. கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள் என்ற ஆணவப் போக்கிலேயே அது தமிழர்களுடன் செயற்படுகின்றது.

ஆணவத்தை ஒருபுறம் தள்ளிவிட்டு, தமிழர்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு முயற்சிக்காவிட்டால், ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக அல்ல ஆசியாவின் அழிவுமிக்க நாடாகவே இலங்கை கருதப்படும் என்று கூறினார் சுரேஷ்.

Related Posts