Ad Widget

அஹிம்சை வழிப் போராட்டம் இறுதியில் ஆயுதப் போராட்டமாகவும் மாறலாம்

அரசாங்கத்தை பலவீனப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் கைகோர்ப்பது இறுதியில் கூட்டமைப்பிற்கே அழிவைத் தேடித் தரும். வடக்கு – கிழக்கினை இணைத்து தமிழீழத்தினை உருவாக்க இந்தியா துணை போகுமாயின் அதனைத் தடுத்து போராடவும் நாம் தயார் என தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அஹிம்சை வழிப் போராட்டம் இறுதியில் ஆயுதப் போராட்டமாகவும் மாறலாம் எனவும் குறிப்பிட்டார்.

sambikka-ranavakka

தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முன்வராவிடின் அஹிம்சை வழியில் போராடவும் தயார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தமை மற்றும் வடக்கு – கிழக்கு இணைந்தே தீர்வு பெறுவோம் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை என்பன தொடர்பில் வினவிய போதே தொழில்நுட்பவியல் மற்றும் அணுசக்தி விவகார அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றியளித்திருக்குமாயின் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சிகள் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கட்சிகளாக செயற்பட்டிருப்பார்கள். இன்றும் இவர்கள் சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளை ஆதரித்து அவர்களை நியாயப்படுத்துகின்றனரே தவிர தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை கவனத்திற்கொள்ளவில்லை. சர்வதேசத்துடன் உறவினை மேற்கொண்டு அதன் மூலம் இந்த அரசாங்கத்தினை பலவீனப்படுத்த முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நினைக்குமாயின் இறுதியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பே அழிவினை எதிர்கொள்ளும். இந்தியாவோ ஐ.நா. அமைப்போ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சைக் கேட்கவில்லை. தமது தேவையினை நிறைவு செய்ய இப்போது கூட்டமைப்பினை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாயின் இறுதியில் அரசாங்கத்திடமே வந்தாக வேண்டும். இதனை தமிழ் தரப்பினர் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும், வடக்கு – கிழக்கினை இணைத்து தனித் தமிழீழத்தினை உருவாக்குவது தான் கூட்டமைப்பின் நோக்கமென்பதை நாம் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டியுள்ளோம். இவர்களின் செயற்பாடுகள் ஒன்றும் புதிய விடயமல்ல.

இலங்கைக்குள் இனப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படுமாயின் அதை தேசிய அளவிலேயே கையாள வேண்டும். எனினும் இன்று தமிழ் தரப்பினரே சர்வதேச ஆதரவினை நாடியுள்ளனர். அதேபோல் அரசாங்கத்தின் எவ்வித கோட்பாட்டிற்கும் இணங்காது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமெனப் போராடுவதும் ஒரு போதும் சாத்தியமாவதில்லை.

இன்று அஹிம்சை வழியில் போராடுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்தாலும் இது அஹிம்சை வழிப் போராட்டமாக அமையாது. இவர்களின் ஆயுதப் போராட்டக் கொள்கை இன்னும் மனதளவில் உள்ளது. எனவே எந்த வகையிலும் போராடுவது தமிழீழத்தினை பெற்றுத் தரப் போவதில்லை.

மேலும், வடமாகாண முதல்வர் மற்றும் சம்பந்தன் மாவை போன்றோர் பிரிவினைவாதக் கொள்கையின் கீழ் செயற்படுவோர். எனவே, இச்செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு முரணானவையே. எனவே, நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் முரணான செயற்பாடுகள் எதனையும் யாரும் செய்ய அனுமதிக்கக் கூடாது. அதேபோல் வட மாகாண முதல்வர் சர்வதேச விஜயத்தினை மேற்கொள்வதாகவும் அரசாங்கத்தின் அனுமதி இருக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts