அல்லைப் பிட்டியில் மதஸ்தலம் ஒன்றில் இருந்து இராணுவ சீருடையும், துப்பாக்கி தோட்டாக்களும் மீட்பு!!

யாழ்ப்பாணம் அல்லைப் பிட்டியில் மதஸ்தலம் ஒன்றில் இருந்து இராணுவ சீருடையும், துப்பாக்கி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று காவற்துறை விசேட அதிடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவை மீட்கப்பட்டன.

இதுதொடர்பில் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், மன்னார் எரிக்கலம்பிட்டி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 12 பேர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் கம்பளை பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்ட மொஹமட் சாதிக் அப்துல்லா மற்றும் மொஹமட் சாஹிட் அப்துல்லா ஆகிய இரண்டு பேரையும், அனுராதபுரத்தில் இருந்து அழைத்து வந்த சிற்றூர்ந்து சாரதியுடன், அவர்களை மறைந்திருக்க உதவிய வர்த்தகர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் கொழும்பு இணைப்பாளர் மொஹமட் ஃபாருக் மொஹமட் பவாஸ், தற்கொலை குண்டுகளை தயாரிப்பதற்கான மின்சுற்றுகளை உருவாக்கி வழங்கி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவற்துறையினர் நேற்று நீதிமன்றில் தெரிவித்தனர்.

வளிபதனாக்கிகளை திருத்தும் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள அவரது கைப்பேசியில் இருந்து, தற்கொலை தாக்குதல் சூத்திரதாரி மொஹமட் சஹ்ரான் பயன்படுத்தி சிற்றூர்ந்தின் புகைப்படங்களும் இருந்துள்ளன.

இதன்படி அவரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி இருந்தது.

இதற்கிடையில் வவுனியா – கணகராயன்குளம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொட்டாஞ்சேனை – மெசஞ்சர் வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் சம்பந்தனமான இறுவட்டுகள், வாக்கிடோக்கி உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களிடம் இருந்து தேசிய தவஹீத் ஜமாத்தின் உறுப்பினர்களது விபரங்கள் அடங்கிய டெப் ஒன்றும், 10 கைப்பேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

அவர்கள் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் தேடப்படுகிறார்.

கைதான இருவரும் காத்தான்குடியை சேர்ந்தவர்கள்.

இதேவேளை தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் குளியாப்பிட்டி பிரதேச இணைப்பாளராக உள்ள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவல் ஒன்றுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு முதல் அவர் தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய இடங்களில் அமுலாக்கப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்கு சட்டம் காலை 8 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts