அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுக்கு பிரதமர் மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்!!

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டிய விடயங்கள் குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன.

அதன்படி, ஜனாதிபதியிடம் சமஷ்டி முறையிலான தீர்வையே இந்தியா வலியுறுத்தவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தவேண்டுமென ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியாகக் கடிதங்களைக் கையளித்துள்ளன.

ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும், இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகரும், உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியும் பங்கேற்றிருந்தனர்.

அதன்படி, புதுடில்லியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பின்போது, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு பிரதமர் மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்று இரா.சம்பந்தன் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இவ்வாண்டுடன் 36 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையிலும், அதிலுள்ள பல்வேறு முக்கிய விடயங்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள், அதில் அதிகாரப்பகிர்வு மிகமுக்கியமான விடயம் என்றும், அதனை வழங்குமாறு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இதனை உடனடியாக பிரதமர் மோடிக்குத் தெரியப்படுத்துவதாகக் குறிப்பிட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர் மீண்டும் சந்தித்து இதுபற்றிப் பேசலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts