அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் நோயாளிகளுக்காக விசேட உணவு!!!

அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்கான சிறப்பு திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நோயாளர்களுக்கான விசேட உணவு வேலைத்திட்டம் தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதற்கமைய மஹரகம புற்றுநோய் மருத்துவமனையை மையமாகக் கொண்டு இந்த சிறப்புத் திட்டத்திற்கான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய தேசிய புற்றுநோய் மருத்துவமனையின் பணிப்பாளர், நிர்வாகம் மற்றும் இந்த விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்களின் கல்வி கலாசாலை , ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் பிறரின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில்,

அரச மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக சுகாதார அமைச்சகம் ஆண்டுதோறும் பெரும் தொகையான பணத்தை செலவிடுகிறது. எனினும் அந்தப்பணம் நியாயமான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மருத்துவமனை வழங்கும் உணவால் நோயாளி திருப்தி அடைகிறாரா ?இல்லையா? என்பதை கூட எவரும் நோயாளியிடம் கேட்பதில்லை. அவ்வாறான நிலையில் தற்போது வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன.

ஆகையால் அரச மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அவர்களுக்கு உணவளிக்கும் முறை ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். நோயாளர்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவை வழங்குவது அவசியம். மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த முன்னோடித் திட்டம், எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து அரச மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

குழம்பு மற்றும் காய்கறிகள் கொண்ட ஒற்றை தட்டு இந்த திட்டத்தின் முக்கிய அம்சம். மீன், இறைச்சி போன்றவற்றுடன் கூடிய தட்டுக்குப் பதிலாக சோறு, காய்கறிகள், இறைச்சி அல்லது மீன் என பிரிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட தட்டில் நோயாளிக்கான உணவு வழங்கப்படும். மேலும், எதிர்காலத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த, மருத்துவமனைகளின் சமையலறைகள் நவீனமயமாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள எரிவாயு அடுப்புகளுக்குப் பதிலாக நீராவியால் இயங்கும் அடுப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதும் அவசியம்.

மருத்துவமனைகளில் உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்குவதற்கான ஏலம் மிகக் குறைந்த விலையை வழங்கும் நபருக்கே வழங்கப்படுகிறது. மேலும் மிகக் குறைந்த விலையை வழங்கும் நபரால் மருத்துவமனைக்கு வழங்கப்படும் மூலப்பொருட்களின் தரம் குறித்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மசாலாப் பொருட்களின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

Related Posts