Ad Widget

அரச அறிவித்தல்கள் இல்லாமல் வேலைவாய்ப்பு, முறைப்பாடு தெரிவித்தால் நடவடிக்கை!

dak-suntharam-arumainayagam-GAயாழில் அரச வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பது எனக் கூறி அநாமதேய துண்டுப்பிரசுரம் மற்றும் அறிவித்தல்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுக்கான இலங்கை தூதுவர் குழு அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடியது.

யாழில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரச வேலைக்கான ஆட்சேர்ப்பு என அநோமதய துண்டு விநியோகிக்கப்பட்டதுடன் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு நேர்முக தேர்வுகளும் நடத்தப்பட்டன. இது தொடர்பில் ஊடகவியளாலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அரச அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

‘ஆட்சேர்ப்பு தொடர்பாக விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தை நானும் பார்த்தேன். அந்த ஆட்சேர்ப்பு தொடர்பில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அரச நியமனங்கள் எங்களுக்கு தெரியாமல் கொடுக்க வாய்ப்பில்லை.

ஆனால் இது தொடர்பாக எனக்கு இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை. வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக்கூறி எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று எங்களுக்கு முறைப்பாடுகள் தந்தால், அது தொடர்பில் நாங்கள் விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்.

அண்மையில், இரு நபர்கள் அநாமதேய பற்றுச்சீட்டுக்கள் சிலவற்றினை ரூபா 500 மற்றும் ரூபா 1000 ரூபாவிற்கு விற்பனை செய்து வந்தார்கள். இந்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, யாழ். பொலிஸாரிடம் தகவல் கொடுக்கப்பட்டு, பொலிஸார் இரு நபர்களையும் கைதுசெய்தனர்.

இவ்வாறான சட்ட விரோத செயல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு ஒரு போதும் பாராமுகம் காட்டமாட்டேன்’ என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு இளைஞர்கள் யுவதிகளை வேலை வாய்ப்பிற்குச் சேர்ப்பது தொடர்பான பதிவு நடவடிக்கைகள் ஏப்ரல் 17 ஆம் திகதி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும், ஏப்ரல் 27 ஆம் திகதி கொக்குவில் இந்து கல்லூரியிலும் மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவதாதி, நடனபாட ஆசிரியர், சங்கீத பாட ஆசிரியர், ஆங்கில பாட ஆசிரியர், வாத்தியக் கலைஞர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், எழுதுநர்கள், அலுவலர்கள், கணினி இயக்குநர், விவசாய மேற்பார்வையாளர், விவசாய அலுவலர்கள், மின் இணைப்பாளர், தச்சு வேலை, மேசன், வர்ணம் பூசுபவர்கள், ஒட்டு வேலை செய்பவர்கள், வாகனம் திருத்துவர்கள், வாகன வேலை செய்பவர்கள், வாகனத்திற்கு வர்ணம் பூசுபவர்கள், கூலி ஆட்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட வேலைகளிற்காக 1350 பேரை உள்வாங்குவது தொடர்பில் இந்தப் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இருந்தும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts