Ad Widget

அரசுக்கும் இராணுவத்துக்கும் பிரச்சினை – முதலமைச்சர்

இலங்கை அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையில் பிரச்சினை தோன்றியுள்ளதா என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

vicky0vickneswaran

வசாவிளான் கிழக்குப் பகுதியில் விடுவிக்கப்படுவதாகக் கூறிய 197 ஏக்கர் காணிகளில் மக்கள் மீளக்குடியேறும் பொருட்டு, காணிகளை பார்வையிடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (20) சென்ற போது, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே காணிகளை பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதியளித்தனர். அரசாங்கம் காணிகளை விடுவிப்பதாக கூறியபோதும், இராணுவம் அதற்கு முழுமையான அனுமதி வழங்காததையடுத்து, காணிகளை பார்வையிடும் நோக்கில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (22) அங்கு சென்று காணிகளை பார்வையிட்டார்.

மீள்குடியேறவுள்ள மக்களை ஓட்டகப்புலம் பகுதியில் அமைந்துள்ள அமல உற்பவ அன்னை ஆலயத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘அரசாங்கம் காணிகளை விடுவிப்பதாகக் கூறுகின்றது. ஆனால் இராணுவம் மறுப்புத் தெரிவிக்கின்றது. அரசாங்கத்துக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பிரச்சினை தோன்றியுள்ளதா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

‘மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் 3 மாதகாலத்துக்குள் 1,000 ஏக்கரில் மீள்குடியேற்றம் எனக்கூறியபோதும், அது முழுமையாக இன்னும் நடைபெறவில்லை. இதனாலேயே எங்களுக்கு இந்தச் சந்தேகம் எழுகின்றது’ என்றார்.

இதன்போது குறுக்கிட்ட பொதுமகன் ஒருவர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இராணுவத்துக்கு கீழ் கடமையாற்றுகின்றனரா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முதலமைச்சர் சிரித்தவாறு கலந்துரையாடலை முடித்துச் சென்றார்.

Related Posts