Ad Widget

அரசியல் தீர்வினைப் பெற சர்வதேச சமூகம் உதவ வேண்டும்!

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரி நீக்லஸ் பேர்னாட் வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினார்.

19748226281

சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிவஞானம் மேலும் கூறியதாவது,

வட மாகாணத்தின் தற்போதைய நிலமை குறித்து ஆராய்வதற்காக அவர் வருகை தந்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகளில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகார பகிர்வினை கோருகின்றோம்.

தமிழ் மக்களுக்கு என விசேடமான அதிகாரத்தினைக் கோரவில்லை. அரசியல் யாப்பிலும் ஏனைய நாடுகளிலும் உள்ள முழுமையான அதிகார பகிர்வினைக் கோருகின்றோம்.

2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் தீர்வு வெளிவர வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். அரசியல் தீர்வின் முடிவுகள் மற்றும் அதன் முன்மொழிவுகள் இவ்வருட இறுதிக்குள் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்ள சர்வதேச சமூகம் உதவி செய்ய வேண்டுமென்பதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பங்களிப்பும் அவசியம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் காணாமல் போனோர்கள் தொடர்பான சட்டம் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஐ.நா சபையில் ஒப்புக்கொண்டவாறு பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச்சம் நீக்கப்படாவிடினும், அதன் கீழ் உள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கலாம். பயங்கரவாத தடைச்சட்ட அதிகாரிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளை பின்தொடர்வதும், அச்சுறுத்துவதுமான செயற்பாட்டினை கூட நிறுத்தியிருக்கலாம்.

ஆனால், இதுவரையில் அச்செயற்பாடுகளை நிறுத்தவில்லை.

சாதாரண குற்றத்தில் ஈடுபட்டால், பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளலாமே தவிர, பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் தலையிட வேண்டியதில்லை. பயங்கரவாத தடைச்சட்ட பிரிவினர் இந்த சட்டத்தின் கீழ் செயற்படுவது பாரதூரமான ஏமாற்றத்தினை அளிக்கின்றது.

அரசியல் கைதிகளை சட்ட நடவடிக்கையின்றி நீண்டகாலத்திற்கு தடுத்து வைத்துள்ளதுடன், சில சட்ட நடவடிக்கைகளையும் இழுத்தடிப்புச் செய்து சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்துடன் சுமூகமான உறவினைப் பேணி செயற்படும் நிலையில், அரசாங்கம் சம்பந்தனின் நல்லெண்ணத்தினைப் புரிந்துகொண்டும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நல்லெண்ணத்தினைப் புரிந்து கொண்டும் ஒத்துழைப்பு வழங்க, அவுஸ்ரேலிய அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய தூதரக அதிகாரியிடம் வலியுறுத்தியதாக சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts