Ad Widget

அரசியல் செத்து விட்டதென்ற அதிருப்தி நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்: செந்தில்வேல்

mayday5அரசியல் எல்லாம் செத்துப் போய்விட்டது. இந்த அரசியல் எங்களுக்கு வேண்டாம். எங்களை ஏதோ சாப்பிட விட்டால் போதுமென்று மக்கள் நினைக்கும் ஒரு அதிதிருப்தி நிலைக்கு இந்த நாட்டு தமிழ் மக்களை கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள் என புதிய ஜனநாயக மாக்ஸீச லெனினிஸ கட்சியின் பொதுச் செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக மாக்ஸீச லெனினிஸ கட்சியின மேதின கூட்டம் நேற்று ஸ்ரான்லி வீதியில் உள்ள பட்டப்படிப்பு கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது, ‘இன்றைய தினம் உலக தொழிலாளி வர்க்கத்தின் தினம் உலக தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட தினம் உலக தொழிலாளி வர்க்கம் உரிமை பெற்ற தினம் அந்த தினம் உழைக்கின்ற மக்கள் 8 மணிநேரம் உழைக்கின்ற அந்த நாளை நினைவுபடுத்துகின்ற தினம்.

இது தனிய 8 மணி நேரத்திற்கு வரையறுக்கப்பட்ட தினம் அல்ல. முதலாளி வர்க்கத்தை சொத்துடைய வர்க்கத்தை, ஆளும் வர்க்கத்தை அவர்களின் அடி பணிதலை எதிர்த்து இனம், மொழி கடந்து போராடிக் கொண்டு இருக்க கூடிய ஒரு சர்வதேச தினம் தான் மேதினம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘ஒரு காலத்தில் யாழ்ப்பாண நகர வீதிக்கு செம்மையாக இருந்த ஒரு காலகட்டம் இருந்தது. அது ஒரு பொற்காலம். தொழிலாளிகள், விவசாயிகள் உழைக்கின்ற மக்கள் உரிமைகளை இன்று சிதைத்து விட்டார்கள்.

பேரினவாத அரசாங்கம் ஒரு புறத்தால், தமிழ் மக்கள் இன ஒடுக்குமுறை மேவி, மக்களின் போராட்டங்களை நசுக்கி, இறுதியாக முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்களை கொலை செய்து, போராட்டங்களில் நசுக்கி விட்டார்கள்.

இன்றைய இளைஞர்கள், யுவதிகள் அபிவிருத்தி அடைந்த நிலையில் இருக்கின்றார்கள். அந்த அபிவிருத்திகள், வீதி புனரமைப்பு, என பல்வேறு புனரமைப்புக்களை செய்துவிட்ட நாடு அபிவிருத்தி அடைந்து விட்டதென மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறுகின்றது. மே தினத்திற்காக கடந்த ஒரு வாரமாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் இருந்தவர்கள் நிதிகொடுத்தார்கள்.

ஆனால் ஒன்றை அவர்கள் சொன்னார்கள் இந்த தென் இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ 20 ஆயிரம் பேருடன் மேதினம் கொண்டாடுகிறார் என பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று நாங்கள் சிறு கூட்டத்தினை தான் நடாத்த முடிகின்றது. இது என் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டதன் விளைவு’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘இந்த நாட்டின் அரசியல் சக்திகளை அடக்கியதன் எதிர் விளைவு, இந்த நாட்டின் பழைய இடது சாரிகளை தன்னுடைய பக்கத்தில் கொண்டு சென்றதன் விளைவு. இந்த நாட்டில் சாதாரணமாக உழைக்கும் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவு தான் நாங்கள் இன்று இந்த மேதினத்தினை இந்தளவிலாவது நடத்துகின்றோம்’ என்றார்.

‘இதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். ஒற்றைப் பேருடனாவது புரட்சிகர மேதினத்தினை நடத்துவோம். அந்த புரட்சிகர உணர்வோடுதான் நாங்கள் இந்த மேதினத்தினை நடத்தியிருக்கின்றோம்.

23 வருடங்களாக வீடு இழந்து, சொத்து இழந்து அகதிகளாக வாழக்கின்றார்கள் வலி வடக்கு மக்கள், தேர்தலுக்கு புள்ளடி இடுவதற்காக நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை’ என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Posts