Ad Widget

அரசியல் கைதிகள் விடயத்தில் பார்வையாளர்களாக அன்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

ஜனாதிபதியுடனான சந்திப்புக்களின் போதும், பல்வேறு கடிதத் தொடர்புகள் மூலமாகவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வடமாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தற்போது அரசியல் கைதிகள் தொடர்பான சில விபரங்களை வடமாகாண ஆளுநரிடம் முதலமைச்சர் கோரியிருக்கின்றார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தொடர் நடவடிக்கைகளில் தான் ஈடுபடவுள்ளதாகவும் முதலமைச்சர் தன்னிடம் தெரிவித்தார் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது தமிழ் அரசியல் கைதிகளுடைய பிரச்சினைகள் ஏறக்குறைய மறந்தது போன்ற நிலையை அடைந்துள்ளது.

தொடர்ந்தும் கைதிகள் சிறைகளுக்குள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய உறவினர்கள் இது தொடர்பாக தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு தமது துயரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் மாத்திரமல்லாமல் எங்களுடைய தமிழ்ச் சமூகமும் எங்களுடைய அரசியல்கைதிகள் விவகாரத்தில் மிகுந்த கவலையுடன் இருக்கிறது.

எங்களுடைய அவைத்தலைவருடன் இந்த விடயம் தொடர்பாக நான் உரையாடியுள்ளேன்.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி வடமாகாண சபையில் நாங்கள் மேற்கொண்ட கவனயீர்ப்புப் போராட்டம் ஊடகங்கள் வாயிலாக ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் கவனத்தை சென்றடைந்திருக்கும் என நம்புகின்றேன்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் நின்றுவிடாது நாம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இப்போதே தயாராக வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காகத் தனியே அவர்களது உறவுகள் மாத்திரம் குரல் கொடுப்பதை விடுத்து பொதுமக்கள் அனைவரும் பார்வையாளர்களாக அல்லாமல் பங்காளிகளாக மாறி குரல் கொடுக்க காலம் தாழ்த்தாது முன்வர வேண்டும் எனவும் அவர் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts