விடுதலைப்புலிகளது காலத்தில் தமிழ்மக்களுக்கு வலுவானதொரு அரசியல் தலைமைத்துவம் இருந்தது. இன்று, அத்தகைய பலம் வாய்ந்த, தமிழ்மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தலைமை இல்லாத நிலையில் அரசியல் ரீதியாக நாங்கள் அங்கவீனர்களாக உள்ளோம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
கருவி அமைப்பால் கடந்த சனிக்கிழமை (03.12.2016) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
காது கேட்காதவர்களையும், கண்பார்வை இல்லாதவர்களையும், வாய் பேச முடியாதவர்களையும், உறுப்புகளை இழந்தவர்களையும் நாங்கள் அங்கவீனர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் என்கிறோம். இந்தக் குறைபாடுகளை நினைத்து எவரும் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். நம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் இவற்றை வெல்ல முடியும். ஒரு புலனை அல்லது ஒரு உறுப்பை இழந்தாலும், மற்றைய உறுப்புகளுக்குக் கூடுதல் திறனோடு இயங்கக் கூடிய ஆற்றலை இயற்கை அன்னை கொடுத்திருக்கிறாள். அந்தத் திறனை அடையாளம் காணுங்கள். மாற்றுத் திறனாக அதனை விருத்தி செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
மாற்றுத்திறனாளிகள் தங்கள் தன்னம்பிக்கையை ஊன்றி நிமிர்ந்தெழுவதற்குப் பொருளாதார அடித்தளம் தேவை. அதனை அமைத்துத்தர வேண்டிய பொறுப்பு வடமாகாண சபையினராகிய எங்களுக்கு உள்ளது. ஆனால், மாகாணசபையே அங்கவீனமாகத்தான் உள்ளது. தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வாக முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாணசபைக்கு முழுமையான அதிகாரங்கள் இல்லை. குறைப்பிரசவமான இதனை வைத்துக்கொண்டு எங்களால் நிறைவாகச் செயற்பட முடியவில்லை.
மாற்றுத்திறனாளியொருவரால் காளான் செய்கையில் இலகுவாக ஈடுபட முடியும். சிறிய அளவில் இதனை மேற்கொள்வதற்குக்கூட ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகத் தேவை. ஆனால், விவசாய அமைச்சுக்குத் தனிப்பட்ட ஒருவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாவுக்கான உதவிகளை வழங்குவதற்கு மாத்திரமே மத்திய அரசின் அனுமதி இருக்கிறது. மீதிப்பணத்தை பயனாளியிடம் வசூலிக்கச் சொல்கிறார்கள். போரினால் நிர்க்கதியாகி நிற்கும் ஒருவரால் அந்தப் பணத்தைச் செலுத்த முடியாமல் இருப்பதால் திட்டத்தை எங்களால் முழுமையாகச் செயற்படுத்த இயலாமல் இருக்கிறது.
மாகாணசபைகள் மாத்திரம் அல்ல, அரசியல் வாதிகளான நாமும் சகல புலன்களும் இயங்கப்பெற்றும் அங்கவீனர்களாகத்தான் இருக்கிறோம். போருக்குப் பிறகு எங்களது உரிமைகள் பற்றி உரத்துப் பேசுவதற்கு நாம் தயாராக இல்லை. அவ்வாறு பேசினால், அரசு கோபித்துக்கொள்ளுமோ, சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவார்களோ என்று மௌனிகளாக இருக்கிறோம். அடுத்த தேர்தலுக்கு ஆசனம் தராமல் விட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் ஆக்க பூர்வமான விமர்சனங்களைக்கூட கட்சித்தலைமைகளிடம் நாம் சொல்லுவதற்குத் தயங்குகின்;றோம். இதுதான் விடுதலை அரசியலுக்குப் பின்னரான இன்றைய தேர்தல் அரசியலின் யதார்த்தம் என்றும் தெரிவித்துள்ளார்.




