Ad Widget

அரசாங்கம் கனவு காண்கின்றது – முதலமைச்சர்

தளர்வடையாது பந்தை அடித்துக் கொண்டிக்கும் மனோ கணேசனின் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பலரைக் களமிறக்கியுள்ளது. அவ்வாறு செய்வதால் மக்களுக்கு தம்பி மனோ மீது இருக்கும் மதிப்பை மாற்றலாம், மறைமுகமாக மக்கள் வாக்குகளை வேறு பங்குபற்றாளர்களுக்கு மாற்றி விடலாம் என்றெல்லாம் அரசாங்கம் கனவு காண்கின்றது அவ்வாறு நடக்காது என்பதே எனது கணிப்பாகும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Capture

வெள்ளவத்தை சண்முகாஸ் உணவகத்தில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று(24) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கொழும்பில் வந்து தம்பி மனோ கணேசன் அவர்களின் கட்சிக் கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அரசியலே வேண்டாம் என்றிருந்த எனக்கு இப்பொழுது தான் அரசியல் சூடு பிடிக்கின்றது. அரசியல் மேடை என்பது ஒரு டெனிஸ் விளையாட்டு அரங்கம் போல. ஒருவர் அடிப்பதை மற்றவர் அடிப்பார். இருவரும் ஒரே பந்தைத்தான் அடிப்பார்கள். விடாமல் அடித்தால்த்தான் வெற்றி. அதேபோல் ஒரு தேர்தல் வருகின்றதென்றால் கட்சிகள் விடாமல் தமது கருத்துக்களை மக்களுக்கு கூறிக் கொண்டேயிருக்க வேண்டும். சற்று தளர்வடைந்து விட்டால் மற்றையவர் முந்திவிடுவார்.

உணர்வை வலியுறுத்தி வருகின்றார்

ஏனென்றால் தம்பி மனோ இரு புதிய சிந்தனைகளை வலியுறுத்தி வந்துள்ளார். அதாவது சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்ற ஒரு தமிழ்த் தலைமைத்துவத்தை அவர் உருவாக்கி வருகின்றார். அதாவது அவர்களும் சேர்ந்து தம்முடன் முன்னேற வழிவகுத்து வருகின்றார்.

அடுத்து தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்த வரையில் இலங்கையின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் அவர்கள் யாவரும் இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்களே என்ற உணர்வை வலியுறுத்தி வருகின்றார். இதைத்தான் அண்மையில் நான் குறிப்பிட்டிருந்தேன். அதாவது சௌமியமூர்த்தி தொண்டைமானைத் தொடர்ந்து இளம் அரசியல்வாதி மனோ கணேசனின் அரசியல்ப் பண்பாடு அவ்வாறான ஒரு சிந்தனைக்கு இட்டுச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தேன்.

பொலிசாரை சீண்டுகின்றார்

இதை நான் வெறும் நட்புக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அல்லது அரசியல் பதில் உபகாரமாகவோ அன்று கூறவில்லை. அவரைக் கூர்ந்து கவனித்து வந்ததன் விளைவாகவே இன்றும் கூறுகின்றேன். அவர் அடிப்படையில் ஒரு மனித உரிமைப் போராளி, ஒரு இலட்சியவாதி. அந்த விதத்தில் சிங்களவர் அல்லது தமிழர் அல்லது முஸ்லீம்கள் என்றோ, கொழும்பை, வடக்கை, கிழக்கை, மலையகத்தை அல்லது பிறமாகாணங்களைச் சேர்ந்தவரென்றோ பாகுபாடு காட்டாது எவருக்கு ஒரு இன்னல் நேர்ந்தாலும் அது சம்பந்தமாகக் குரல் எழுப்பி வருகின்றார். அனர்த்தம் நடந்த இடத்திற்கு விரைகின்றார். பொலிசாரைச் சில தடவைகளில் சீண்டுகின்றார்.

மனத்தில் எடுக்கப்படவேண்டும்

இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த அந்தக் காலத்தில், வெள்ளை வான்கள் வேலிகளுக்கு வெளியில் வெளிப்படையாகவே நின்று பலரைக் கடத்தி வேட்டையாடிய போதெல்லாம், கொழும்பு மாநகரில் சற்றுந் தளராது நின்று படையினர் பிழைகளை வெளிக்காட்டி, முடியுமானால் பிடித்துச் செல்லப்பட்டவர்களைப் பிணையில் எடுத்து, எமது அரசியல் பின்புலங்களை பிற நாடுகளுக்கும் எடுத்துரைத்து அளப்பறிய சேவையை தனி மனிதனாக அவர் அக்காலத்தில் ஆற்றியமை எல்லோராலும் மனத்தில் எடுக்கப்படவேண்டும்.

பாதிப்புற்ற மக்களின் மொழி, இனம், மதம், பால் போன்றவற்றுக்கு அப்பால் சென்ற மனிதாபிமான முறையில் சேவையாற்றியதால்தான் குறுகிய காலத்தினுள்ளேயே தம்பி மனோ கணேசன் அவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வடக்கில் அரசியலில் நிலைபெற்றிருந்த சிலரையுந் தம்முடன் சேர்த்துக்கொண்டதால் அவரின் தேர்தல் வியூகம் நன்றாக விரிவடைந்துள்ளது. அந்த இணைப்பையும் ஒன்றுமையையும் அவர் கட்டிக் காத்து வந்துள்ளார்.

இராணுவத்தினரும் புலிகளும் சேர்ந்து உதவினர்

எமது தமிழ்ப் பேசும் மக்களிடையே பல வேற்றுமைகள் இருந்து வருகின்றன. சாதி அடிப்படையில், மத அடிப்படையில், பிரதேச அடிப்படையில் ஒருவரையொருவர் நாங்கள் கடுமையாக விமர்சித்த காலம் இருந்து வந்தது. ஆனால் அண்மைக் காலங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் எம் எல்லோரையும் அடக்கி ஆளப் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் தலைப்பட்டதால் எங்களுக்குள் ஒரு ஒற்றுமை தற்பொழுது வளர்ந்து வருகின்றது. நட்டங்கள் எம்மை நாடி வரும் போது நாம் நண்பர்கள் ஆகிவிடுகின்றோம். உதாரணத்திற்கு சுனாமி வந்தபோது இராணுவத்தினரும் புலிகளும் சேர்ந்து சகோதரர்கள் போல் நடந்து பாதிப்படைந்த மக்களுக்கு உதவினார்கள்.

ஆனால் ஓரிருவாரங்களுக்குள் தலைமைத்துவங்கள் அவர்களைப் பிரித்தெடுத்து விட்டன. எனவே எங்கள் தமிழ்ப் பேசுந் தலைமைத்துவங்கள் அதே பிழையை மீண்டும் மீண்டுஞ் செய்யாமல் எமது வடமாகாண, கிழக்குமாகாண, மலையக, கொழும்பு மாநகர மற்றைய தெற்கில் உள்ள சகல மாகாணங்களிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்களை இணைத்து அரசியல் நடத்த முன் வரவேண்டும். அதற்காக ஒவ்வொரு உட்பிரிவினரும் தங்கள் தனித்துவ அடையாளங்களை ஒரேயடியாக கைவிட்டு விட வேண்டும் என்று நான் கூறவரவில்லை. தமிழ்ப்பேசும் உட்பிரிவினர் சகலருந் தத்தம் தனித்துவங்களுடன் உள்வாங்கப்பட்டு அரசியல், சமூக, கலாச்சார ரீதிகளில் ஒன்று திரள முன்வர வேண்டிய அவசியத்தைத் தான் நான் குறிப்பிடுகின்றேன். தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைத்தே இதைக் கூறுகின்றேன்.

கதை கட்டி விடுகின்றார்கள்

தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைவது இன அடிப்படையிலான ஒரு குற்றம் என்று பெரும்பான்மையினத்தினர் கூற எத்தனித்துள்ளார்கள். தனி மொழியை அரசியல் சட்டத்தில் உள்ளடக்கியது பெரும்பான்மையினர். தனி மத தனியுரிமையை அரசியல் யாப்பில் அரங்கேற்றியது பெரும்பான்மையினர். தமக்கே தனியாக இந்நாடு சொந்தம் என்று இன்றும் கூறிவருவதும் அவர்களே. ஆனால் தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்று சேர்ந்தால் அது தேசியத்திற்கு முரண், நாட்டுக்கு முரண், பயங்கரவாதத்தின் பிரதிபலிப்பு என்றெல்லாம் கதை கட்டி விடுகின்றார்கள். அதற்காக எம்மவரில் சிலர் தேசியக் கட்சிகளுக்கே வாக்குப் போடவேண்டும் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.

தேசியக் கட்சிகள் தனிப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களுக்கு வேண்டுமானால் சலுகைகளை வழங்குவன. ஆனால் ஒரு ஜனசமூகப் பிரிவினருக்கு எந்தவித உரிமைகளையும் வழங்க மாட்டார்கள். ஏனென்றால் அவற்றின் அதிகாரங்கள் பொதுவாக பெரும்பான்மையினர் வசமே இருந்து வந்துள்ளது. சிறுபான்மை அமைச்சர்களுக்குத் தமது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சம் தமது சொந்த ஜனசமூகப் பிரிவினர் பற்றி அதிகம் பேசவிடாது தடுத்துள்ளது. இதுவரை காலமும் பெரும்பான்மையினர் நடாத்தும் தேசியக் கட்சிகளின் போக்கை எடுத்துப் பாருங்கள். தனிப்பட்டவர்கள் நயம் பெற்றார்கள். எமது சமூகத்தினர் அரசியல் ரீதியாக எதையும் பெறவில்லை என்பதே உண்மை. எமது தனித்துவத்தைக் கடைப்பிடித்து அதே நேரம் மற்றைய இனங்களுடன் இணைந்து முன்செல்வதானால் மட்டுமே தமிழ் மொழியும் அதைப் பேசும் இனங்களும் இந் நாட்டில் நிலை பெறுவன.

மனோ கணேசனைப் பொறுத்த வரையில் சிங்கள மக்களுக்கும் தலைமைத்துவத்தை அளித்து அவர்களை வழிநடத்தக் கூடிய நிலையில் இருக்கின்றார். ஒரு தேசியக் கட்சியைத் தானே வழி நடத்தக் கூடிய பாங்கில் செயற்பட்டு வருகிறார். அதாவது தமிழ்ப் பேசும் மக்களின் ஒன்று திரளல் சிங்கள மக்களுக்கெதிரான ஒன்று அல்ல என்பதை எப்பொழுதுமே வலியுறுத்தி வருகிறார். ஆகவே அவருக்கு எம்மாலான ஒத்துழைப்புக்கள் அனைத்தையும் நாம் வழங்க வேண்டும்.

முஸ்லிம் சகோதர சகோதரிகளும் சேர்த்து ஒன்று திரள வேண்டும் என்பது காலம் கோடிட்டுக் காட்டும் ஒரு கட்டாயமாகும். அதன் மையப் புள்ளியாக தம்பி மனோ கணேசன் திகழ்கின்றார் என்றால் அது மிகையாகாது.

அரசியல் ரீதியாகப் பலப்படுத்தவேண்டும்

எமது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை நாம் உரக்கக் கூவிப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் அதே நேரம் இந் நாட்டின் மற்றைய சகல இனத்தவரையும் எம்முடன் அணைத்துச் செல்வதானது எம் நாட்டின் பன்மொழி, பன்மத, பல்லினத் தன்மையை வலியுறுத்துவதாக அமையும். அந்த முற்போக்கு நகர்வில் ஒரு பிரதான பாத்திரத்தை தம்பி மனோ கணேசன் வகித்து வருகின்றார். எனவேதான் எம் மக்கள் தவறாது எதிர்வரும் மேல்மாகாண சபைத் தேர்தலில் அவரது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் சின்னமான ஏணிச் சின்னத்திற்கு வாக்களித்து அவரை அரசியல் ரீதியாகப் பலப்படுத்துமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

இந்தத் தேர்தலிலும் தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க பங்காளிக் கட்சிகளையும் சுயேற்சைக் குழுக்களையும் அரசாங்கம் களமிறக்கியுள்ளது. ஆனால் இங்கு இடம்பெறுந் தேர்தலில் எமது வாக்குகள் சிதறிவிடக் கூடாது. வடக்கிலோ மலையகத்திலோ அவற்றை ஈடுகட்டி விடலாம். ஏனெனில் கணிசமான தமிழ்ப் பேசுஞ் சனத் தொகை அங்குண்டு. மேல் மாகாணம் அவ்வாறல்ல. தமிழ்ப் பேசும் மக்களின் ஜனத்தொகை குறைவானது. எமது வாக்குச் சிதறினால் இங்கு வாழும் எமது மக்களின் இருப்பை அது அசைத்து விடும். எனவே தான் கூறுகின்றேன். வாக்குகளைச் சிதறிவிட இடமளிக்காமல் எமது தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்று திரண்டு ஒரு முகமாக ஜனநாயக மக்கள் முன்னணியின் சின்னமான ஏணி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று. அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளுடனேயே ஜனநாயக மக்கள் முன்னணி தற்போது இணக்கப்பாட்டை வைத்துள்ளது. எனவே அரசுக்கு எதிரான தேசியக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து அவர் கடமையாற்றலாம். இதனால் தேசியக் கட்சி ஒன்றிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதொழிகிறது.

பெண்கள் என்னைக் கைவிடவில்லை

எமது மக்களை வடமாகாணத்தில் வாக்களிக்குமாறு நான் கேட்டபோது இரண்டு விடயங்களுக்கு முதல் இடம் கொடுத்தேன். ஒன்று வாக்களிப்பு விகிதம் கூடினால்த்தான் எம்மால் எமது வெற்றியை ஊர்ஜிதப்படுத்த முடியும் என்ற கருத்து. எந்தக் காரணத்திற்காகவும் எவரும் வாக்களிக்காமல் போய்விடக்கூடாதென்ற கருத்தை மீண்டும் மீண்டும் எம் மக்களின் முன்வைத்தேன். அங்கு இராணுவக் கெடுபிடிக்கள் இருந்த போதும் இதை மிக அழுத்தமாக அவர்கள் முன்வைத்தேன்.

அடுத்தது பெண்கள் தேர்தலில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து. வழமையாக எமது பெண்கள் வீட்டில் உள்ள ஆண்மக்களை வாக்களிக்க அனுப்பிவிட்டு தாங்கள் சமையலில் ஈடுபடுவார்கள். அல்லது குழந்தைகளின் பராமரிப்பில் ஈடுபடுவார்கள். எனவேதான் வாக்களிக்கும் தினத்தை ஒரு முக்கியமான தினமாகக் கணித்து பெண்கள் தவறாமல் சென்று வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் என்னைக் கைவிடவில்லை.

இதையே மேல்மாகாண வாக்காளப் பெருமக்களிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தவறாது வாக்களிக்கச் செல்லுங்கள். ஆண்கள், பெண்கள் அனைவருஞ் செல்லுங்கள். சென்று ஏணிச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

கிழக்கில் நடந்தது போல் வாக்காளப் பெருமக்கள் எமது வாக்குரிமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடாதீர்கள். கிழக்கில் நடந்துள்ளது உங்கள் எல்லோருக்குந் தெரியும். வாக்களிப்பில் பலர் கலந்து கொள்ளாமையால்த்தான் அங்கு தவறிழைக்கப்பட்டுள்ளது.

வடக்கிலும் கிழக்கிலும் மாகாண ஆட்சியைத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித்துப் பிடித்து விடலாம். ஆனால் மேல் மாகாணம் அவ்வாறான மாகாணம் அல்ல. எனினும் எமது மக்களைப் பெருவாரியாகத் தேர்ந்தெடுப்பதின் மூலம், உருவாகப் போகும் ஆட்சியின் மீது நாம் அதிக பட்ச அழுத்தத்தைப் பிரயோகிக்கலாம். இனி வருங்காலத்தில் வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு மேலும் தமிழர் வாழ் பிறஇடங்கள் அனைத்திலும் நாம் சேர்ந்து ஒற்றுமையுடன் வாக்களிப்பதால் எமக்கு நாமே அரசியல் பலத்தைத் தேடிக் கொள்ளலாம். இனிவரும் காலம் வித்தியாசமான காலம் என்பதை எம் மக்கள் உணரவேண்டும். வடகிழக்கு மக்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் மலையகத்தில் கூட பெரும்பான்மையோர் தமிழ் மக்களை ஓரளவு மரியாதையுடன் நடத்தினார்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததும் பதுளையில் ஒரு பள்ளிக் கூடத்தில் தமிழர் ஒருவரின் சட்டபூர்வமான கோரிக்கையைக் கூட பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் ஏற்காமல், போய் பிரபாகரனிடம் கேள் என்று கூறியதாக எனக்கு செய்தி வந்தது. பலம் இருந்தால்த்தான் இன்றைய உலகில் மதிப்பு. அது ஆயுதப் பலம் அல்லது சரீரபலம் என்று நான் கூறவரவில்லை. ஆனால் வாக்குரிமையால் நாம் பெறும் பலம் தான் இனி எமக்கு உற்ற துணையாக இருக்கப் போகின்றது என்பதை எம் மக்கள் மறக்கக் கூடாது. இலங்கையில் குறிப்பாக மேல் மாகாணத்தில் தமிழ்த் தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரு ஜனநாயகக் குரலாக ஜனநாயக மக்கள் முன்னணி பரிணாமம் பெற்றுள்ளது. அதற்கு அனுசரணையாக இருப்பது எம் எல்லோரதும் கடமை.

எமக்கென, எமது நலனுக்கென, நாட்டின் நலனுக்கென உருவாக்கப்பட்ட கட்சி என்ற முறையில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு எமது மக்கள் மேல் மாகாணத்தில் இம் மாதம் 29 ந் திகதியன்று வாக்களிப்பது உங்கள் ஒவ்வொருவரினதுந் தலையாய கடன் என்பதை இத் தருணத்தில் கூறி அமர்கின்றேன்.

Related Posts