Ad Widget

அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவுறுத்தல்!

யாழ் குடாநாட்டில் குற்றச் செயல்கள் ஒழிந்து இப்போது அமைதி நிலவுவதாகவும், இந்த அமைதிய சீர்குலைப்பதற்கு எந்த ஒரு சக்திக்கும் இடமளிக்க முடியாதெனவும் அவ்வாறு அமைதியை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் புதிதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரானிஸ்லாஸுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடமை பொறுப்பேற்றதன் பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னிலையாகிய புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரானிஸ்லசுக்கு யாழ் குடாநாட்டில் தற்போது நிலவுகின்ற அமைதி நிலைமை குறித்து நீதிபதி இளஞ்செழியன் எடுத்துரைத்தபோதே இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ் குடாநாட்டில் தற்போது அமைதியான சூழல் காணப்படுகின்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பல வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் அரங்கேறின. நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்தன. பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், மதப் பெரியார்கள், புத்தி ஜீவிகள், பொதுமக்கள் என பலரும் குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு வலியுறுத்தி வந்தனர்.

இறுக்கமான நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் பொலிசாரின் நடவடிக்கைகளையடுத்து, வன்செயல்களும் குற்றச் செயல்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்சமயம் போதை வஸ்து கஞ்சா கடத்தல்கள் மிக நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டாலும், ஒப்பீட்டளவில் அவைகள் ஓரளவு குறைவடைந்துள்ளன.

வடகடல் பகுதிக்குள் பிரயாணம் செய்கின்ற அல்லது நடமாடுகின்ற படகுகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையடுத்து கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையடுத்து, கடத்தல்கள் குறைவடைந்துள்ளன. வாள் வெட்டுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கொள்ளை களவுகள் குறைவடைந்துள்ளன. மாணவர் குழு மோதல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இளைஞர்கள் வீதிகளில் மோதிக்கொள்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைதியாக இருக்கும் யாழ் குடாநாட்டை சீரழிக்க முயலும் எந்தவொரு சக்தியையும் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு சீரழிப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளை இறுக்கமான சட்ட நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வன்முறைகள் மற்றும் குற்றச் செயல்கள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.

வாள்வெட்டு கலாசாரம் மீண்டும் ஆரம்பிக்க இடமளிக்கவே. ஆத்தகைய முயற்சிகளுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாணவர்களின் குழு மோதல்கள் மற்றும் இளைஞர் மோதல்களைத் தடுப்பதற்கும், இளம் பெண்கள், மணவிகள் மீதான இளைஞர்களின் சேட்டைகளைத் தவிர்ப்பதற்கும் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

மாலை 6 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இடையில் சந்திகளில் அநாவசியமாகக் கூடும் மாணவர் குழுக்கள் இளைஞர் குழுக்களை முதற் தடவையாக எச்சரித்து அனுப்ப வேண்டும். இரண்டாவது தடவையாக பொலிஸ் நிலையத்திற்கு அவர்களைக் கொண்டு வந்து, அவர்களின் பெற்றோரையும் அழைத்து, சமூக விரோத கூட்டங்கள் கூடியதை விளங்கப்படுத்தி, மீண்டும் அவ்வாறு செயற்படக் பெறக்கூடாது என்ற எச்சரிக்கையும் அறிவுரையும் வழங்கி, பெற்றோர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும். சட்டவிரோத கூட்டம் கூடியமைக்காக மூன்றாவது தடவையாக பிடிபடுபவர்களை நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்

வாள்வெட்டு கலாசாரத்திற்கு பெயர் பெற்ற சுன்னாகம், கோப்பாய், மானிப்பாய், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மீண்டும் வாள்வெட்டு வன்முறைகளும் குற்றச் செயல்களும் தலைதூக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் அந்தந்த பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறத்தல்கள் வழங்க வேண்டும்.

ஊர்காவற்றுறை பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட அல்லைப்பிட்டி கிராமத்தில் கடத்தப்பட்ட 6 மாடுகள் இறைச்சியாக்கப்பட்டு மண்டைதீவு ஊடாக படகுகள் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அல்லைப்பிட்டியில் இருந்து குருநகர் பாஷையூர் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இத்தகைய கடத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கி, அச்செயலில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும.

யாழ் குடாநாட்டில் வன்முறை குழப்பம் ஏற்பட்டால் தொடர் வன்முறையாக நிகழ்வது வழமை. முதலாவது வன்முறையை இறுக்கமாக அடக்கி ஒடுக்கழனால், ஆரம்பத்திலேயே வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிடும் என்பதும் எங்கள் அனுபவம். எனவே, சட்டம் ஒழுங்கை நிலைப்படுத்தி, குற்றச் செயல்களைக் குறைத்து, வன்முறையாளர்களைக ;கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மேல் நீதிமன்றம் பக்கபலமாக இருந்து செயற்படு:ம்.

பாரிய குற்றங்களுக்குப் பிணை வழங்குவதில் மிகவும் இறுக்கமான நடவடிக்கைகளையே மேல் நீதிமன்றம் கடைப்பிடிக்கின்றது. எனவே அனைத்து பொலிசாரும் இறுக்கமாக கடமைகளைச் செய்வதற்கு உயர் பொலிஸ் அதிகாரி என்ற முறையில் செயற்பட வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணத்திற்கான புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts