Ad Widget

அமைதியான ஜனநாயக போராட்டத்தை ஏற்றுக்கொள்கிறேன் : பதில் ஜனாதிபதி ரணில்

அமைதியான ஜனநாயகப் போராட்டத்தினை நான் நூறு வீதம் ஏற்றுக்கொள்கின்றேன். அதற்காக பாராளுமன்ற ஜனநாயகத்தை தகர்த்தெறிவதற்கு இடமளிக்க முடியாதென புதிதாக பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதியதாக இன்றையதினம் பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய பதில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

பதில் ஜனாதிபதியாக பணியாற்றவுள்ள குறுகிய காலத்திற்குள் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் முறைமை மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 19 ஆவது அரசியலமைப்பு திருத்த்ததினை முழுமையாக அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.

அடுத்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதிக்கு விரைவில் 19 ஆவது திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பினை இந்த வாரத்திற்குள் ஏற்படுத்துவேன்.

அமைதியான ஜனநாயக போராட்டத்தினை நான் நூறு வீதம் ஏற்றுக்கொள்கின்றேன். போராடும் உரிமை உள்ளது. வன்முறையை அனுமதிக்க முடியாது. அதற்காக பாராளுமன்ற ஜனநாயகத்தை தகர்த்தெறிவதற்கு இடமளிக்க முடியாது. போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரர்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுபவர்கள். அரசியலமைப்புக்கு அப்பால் சென்று செயற்பட தயாரில்லை.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு பதவிநிலை தலைமை அதிகாரி, பொலிஸ்மா அதிபர், முப்படை தளபதிகளை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளேன். வன்முறையாளர்களுக்கு எதிராக அரசியல் தலையீடு இன்றி நடவடிக்கை எடுக்க முழு அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

‘ஜனாதிபதி’ என்று விழிக்கும் போது ‘அதிமேதகு’ என்ற பதத்தை உபயோகிப்பதை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பதில் ஜனாதிபதி என்ற ரீதியில் தடை செய்கின்றேன்.

நாட்டில் தேசிய கொடி மாத்திரம் போதும் என்பதால் ‘ஜனாதிபதி கொடியையும்’ இரத்து செய்கின்றேன்.

நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம் என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Related Posts