Ad Widget

அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!

அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.

Keheliya-Rambukwella

வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அத்துடன் வழக்கும் அடுத்த வருடம் மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2011 டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்துக்கு வந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் பின்னர் காணாமல் போனார்கள்.

இவர்கள் வெள்ளை வானில் வந்த சீருடை தரித்தவர்களினாலேயே கடத்தப்பட்டனர் என இவர்களின் குடும்பத்தவர்கள் குற்றஞ்சாட்டினர். அத்துடன் இது தொடர்பில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றில் சாட்சியமளிக்க அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, நாடாளுமன்ற உறுப்பினர் ஹெந்துன்நெத்தி, அப்போதைய யாழ். மாவட்ட இராணுவத் தளபதி, அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

ஆனால் இவர்கள் எவரும் நேற்றைய தினம் மன்றில் முன்னிலையாகவில்லை. இதனால் வழக்கை ஒத்தி வைத்த நீதிவான் குறித்த சாட்சிகளுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார். இதேசமயம் அடுத்த தவணையிலும் இவர்கள் முன்னிலையாக விடின் நீதிமன்றின் ஊடாகப் பிடியாணை பிறப்பிக்கக் கோரப் போகிறார் என லலித், குகன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி றுவான் போபகே ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Related Posts