Ad Widget

அமெரிக்காவில் பாலியல் குற்றம்: முன்னாள் மேஜர் திருப்பி அனுப்பிவைப்பு

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவர், பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளார். பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு அவர் திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

ஐ.அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்துக்குப் பயிற்சிக்காகச் சென்ற அவர், அங்கு தங்கியிருந்த ஹொட்டலிலேயே, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

இயந்திரப் பராமரிப்பாளரான குறித்த பெண், குறித்த சந்தேகநபரின் அறையில் காணப்பட்ட வளி பதனப்படுத்தியைத் திருத்துவதற்காக, அவரது அறைக்குள் சென்றுள்ளார். அப்போது கதவை மூடிய குறித்த நபர், அப்பெண் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபரைத் தடுத்துவைக்க உத்தரவிட்ட ஹவாய் நீதிமன்றம், பின்னர் இலங்கைக்கு அவரை நாடு கடத்தியுள்ளது. இந்த வழக்கு, ஏப்ரல் மாதத்தில், மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதனால் இச்சந்தேகநபர், கடந்த வெள்ளிக்கிழமை, நாடு திரும்பியுள்ளார்.

சந்தேகநபர், அனர்த்த முகாமைத்துவ மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாகப் பயிற்சிகளைப் பெறுவதற்காக, இலங்கை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட ஒருவர் என்பதை, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை, இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகமும் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts