Ad Widget

அமுலுக்கு வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது.

அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடைமுறையை முன்னெடுத்து செல்வதாகவும், அதில் மக்களுக்கு மறைக்க வேண்டிய விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தகவல் அறியும் உரிமை சட்டமூலம் கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டமூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதோடு, அது நிறைவேற்றப்பட்டு 6 மாத காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும், இதனடிப்படையில் நாளை மறுதினம் 6 மாதங்கள் பூர்த்தியடைவதாகவும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நடைமுறையில் உள்ள 51 அமைச்சுகளில் 50 அமைச்சுகளுக்கான தகவல் அறியும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட மட்டத்தில் செயலாளர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளதோடு, மாவட்ட ரீதியிலும் தகவல் அறியும் அதிகாரிகளுக்குமான மேலதிக பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு 2015 டிசம்பர் 18ஆம் திகதி வர்த்தகமானி ஊடாக வெளியிடப்பட்டது.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts