Ad Widget

அனைத்து பீட மாணவர்களும் காலவரையறையின்றி வகுப்புப் புறக்கணிப்பு

கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யும் வரை கால வரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் நேற்றைய தினமும் இன்றும் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களான தர்ஷானந், தர்ஷன், ஜெகத்மேனன், சொலமன் ஆகியோரை விடுதலை செய்யும் வரை அனைத்து பீட மாணவர்களும் கால வரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெற்ற சம்பவங்களைக் கண்டித்தும் மாணவர்கள் தாக்கப்பட்டதனைக் கண்டித்தும் பல்கலை மாணவர்கள் 2 நாள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் எதிர்வரும் திங்கட்கிழமை வகுப்புக்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இம் மாணவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு 3 மாத காலம் விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவபீட மாணவனான கணேசமூர்த்தி சுதர்சன் (வயது 22 உரும்பிராய்) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் (வயது 24 கந்தர்மடம்), கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான கனகசுந்தரசுவாமி ஜெனமேஜெயன் (வயது 24 புதுக்குடியிருப்பு), விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த சண்முகம் சொலமன் (வயது 24 யாழ்ப்பாணம்) ஆகிய மாணவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எனவே இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி கால வரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.இதேவேளை விடுதியில் தங்கியுள்ள வெளிமாவட்ட மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறி தங்கள் மாவட்டங்களுக்குச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts